எங்க ரேஞ்சுக்கு 208லாம் ஒரு டார்கெட்டா..? வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா கோலியின் வேற லெவல் பேட்டிங்

By karthikeyan VFirst Published Dec 7, 2019, 10:35 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 208 ரன்கள் என்ற கடின இலக்கை விராட் கோலியின் வெறித்தனமான பேட்டிங்கால் 19வது ஓவரிலேயே எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 
 

ஹைதராபாத்தில் நேற்று நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, வெஸ்ட் இண்டீஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் எவின் லூயிஸ் முதல் ஓவரிலிருந்தே அதிரடியை தொடங்கினார். ஓவருக்கு ஓவர் சிக்ஸர், பவுண்டரி என தெறிக்கவிட்டார் லூயிஸ். 

அதிரடியாக ஆடிய அவர் 17 பந்தில் 40 ரன்களை குவித்தார். வாஷிங்டன் சுந்தரின் பந்தில் 6வது ஓவரில் லூயிஸ் ஆட்டமிழக்க, 23 பந்தில் 31 ரன்கள் அடித்து பிராண்டன் கிங்கும் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹெட்மயரும் கேப்டன் பொல்லார்டும் இணைந்து அபாரமாக ஆடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஹெட்மயர், தனது டி20 கெரியரில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். 

41 பந்தில் 56 ரன்கள் அடித்த ஹெட்மயரை வீழ்த்திய சாஹல், அதே ஓவரில் பொல்லார்டையும் வீழ்த்தினார். பொல்லார்டு தனது இயல்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் 19 பந்தில் 37 ரன்கள் அடித்தார். பின்னர் டெத் ஓவர்களில் ஜேசன் ஹோல்டரும் ராம்தினும் இணைந்து ஓரளவிற்கு அடித்து ஆடி ஸ்கோரை 200 ரன்களை கடக்கவைத்தனர். 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 207 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை அடித்தது. 

208 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, 10 பந்தில் 8 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் ராகுலுடன் கேபட்ன் கோலி ஜோடி சேர்ந்தார். கோலியும் ராகுலும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை வெளுத்து வாங்கினர். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டினர். கோலியும் ராகுலும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 100 ரன்களை குவித்தனர். 

அரைசதம் அடித்த ராகுல் 40 பந்தில் 62 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, அதன்பின்னரும் தனது அதிரடியை தொடர்ந்த கோலி, சிக்ஸர் மழை பொழிந்தார். ரிஷப் பண்ட் 9 பந்தில் 18 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் சோபிக்கவில்லை. ஆனாலும் ஒருமுனையில் நிலைத்து நின்று வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை தெறிக்கவிட்ட கோலி, இறுதி வரை களத்தில் நின்று தானே அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். கோலி அதிரடியான பேட்டிங் மட்டுமல்லாமல், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை கடுமையாக சீண்டினார். 

18வது ஓவரை வீசிய பொல்லார்டு, அந்த ஓவரில் ஒரு பந்தை வீச ஓடிவந்து, ஆனால் வீசாமல் ஏமாற்றிவிட்டு சென்றார். உடனே லெக் அம்பயரிடம், டைம் ஆகிக்கொண்டிருக்கிறது. இவர்(பொல்லார்டு) இப்படி செய்துகொண்டிருக்கிறார் என்று புகார் செய்தார். அதற்கடுத்து வீசிய பந்தை சிக்ஸர் விளாசினார் கோலி. 

19வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தார் கோலி. இந்த போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் வேற லெவலில் இருந்தது. வழக்கமான தனது நேர்த்தியான ஷாட்டுகளின் மூலம் பந்துகளை பறக்கவிட்ட கோலி, சிக்ஸர்களை அசால்ட்டாக அடித்தார். வழக்கமாக பவுண்டரிகளை அதிகமாக அடிக்கும் கோலி, இந்த போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்தார். மிட் விக்கெட், எக்ஸ்ட்ரா கவர், லாங் ஆன் என அடித்து நொறுக்கினார். 50 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 94 ரன்களை குவித்தார் கோலி. 

கோலியின் அதிரடியால் 208 ரன்கள் என்ற இலக்கை 19வது ஓவரிலேயே எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 
 

click me!