உன்னால முடியாதுனு யாராவது சொன்னா, நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல; உன்னை.! கனா வசனத்தின் ரிஜ வெட்சன் தீபக் சாஹர்

By karthikeyan VFirst Published Jul 22, 2021, 4:13 PM IST
Highlights

தீபக் சாஹர் கிரிக்கெட் ஆட சரிப்பட்டு வரமாட்டார் என்று மட்டம்தட்டிய வெளிநாட்டு பயிற்சியாளரை அம்பலப்படுத்தி, கூடவே சேர்த்து தரமான மெசேஜையும் தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் வெங்கடேஷ் பிரசாத்.
 

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முழுக்காரணம் தீபக் சாஹர் தான். 276 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 193 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் பொறுப்புடனும், அதேவேளையில் மிகச்சிறப்பாகவும் பேட்டிங் ஆடி, புவனேஷ்வர் குமாரின் ஒத்துழைப்புடன் கடைசி வரை போட்டியை எடுத்துச்சென்று இந்திய அணியை வெற்றி பெற செய்தார் தீபக் சாஹர்.

தீபக் சாஹரின் முதிர்ச்சியான பேட்டிங்(69*) தான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம். சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட் வீழ்த்தியதுடன், பேட்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த தீபக் சாஹர் தான் அந்த போட்டியின் ஆட்டநாயகன். 

பயிற்சியாளர் ராகுல் டிராவிட், திறமைசாலிகளை கண்டறிந்து அவர்களது திறமையை நிரூபிக்க  வைக்க வல்லவர். இந்தியா அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக இருந்து அந்த பணியை செய்துகொண்டிருந்த ராகுல் டிராவிட், இப்போது இந்திய சீனியர் அணியிலும் அதே பணியை செவ்வனே செய்துவருகிறார். தனது மேட்ச் வின்னிங் இன்னிங்ஸுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன் மீது வைத்த நம்பிக்கையும், அவர் அளித்த உத்வேகமும் அறிவுரையும் தான் காரணம் என்று தீபக் சாஹரே தெரிவித்தார்.

தீபக் சாஹரின் திறமையை வெளிக்கொண்டுவர வைத்து அவரை ஆட்டநாயகனாக உருவாக்கியதும் பயிற்சியாளர் தான். இதே தீபக் சாஹரை கிரிக்கெட்டுக்கே சரிப்பட்டு வரமாட்டீர்கள் என்று ஓரங்கட்ட முயன்றதும் ஒரு பயிற்சியாளர். தீபக் சாஹரை வெற்றி வீரனாக உருவாக்கியது ராகுல் டிராவிட். தீபக் சாஹரின் மதிப்பும் திறமையும்  தெரியாமல் அவரை மட்டம்தட்டிய பயிற்சியாளர் ஆஸி., முன்னாள் வீரர் கிரேக் சேப்பல்.

கிரேக் சேப்பல் தீபக் சாஹரை மட்டம்தட்டிய  சம்பவத்தை வெங்கடேஷ் பிரசாத் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து டுவீட் செய்துள்ள வெங்கடேஷ் பிரசாத், ஆர்சிஏ-வில் தீபக் சாஹரை கிரேக் சேப்பல் புறக்கணித்தார். தீபக் சாஹரின் உயரத்தை காரணம் காட்டி, அவரை வேறு ஏதாவது தொழிலை தேர்வு செய்யுமாறு கூறினார் கிரேக் சேப்பல். இன்றைக்கு தனி நபராக இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறார் தீபக் சாஹர். கதை சொல்லும் கருத்து: உங்களை நம்புங்கள்.. வெளிநாட்டு பயிற்சியாளர்களை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று பதிவிட்டிருந்தார் வெங்கடேஷ் பிரசாத். 

Deepak Chahar Was rejected by Greg Chappell at RCA for his height and told to look at a different occupation.
And he single handedly won a match with not even his primary skills.
Moral of the story- Believe in yourself and don't take overseas coaches too seriously. pic.twitter.com/cByzg9uorj

— Venkatesh Prasad (@venkateshprasad)

 

வெளிநாட்டு பயிற்சியாளர்களில் விதிவிலக்காக சில நல்ல பயிற்சியாளர்கள் இருப்பதையும் சுட்டிக்காட்ட மறக்கவில்லை வெங்கடேஷ் பிரசாத்.

மகளிர் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கனா திரைப்படத்தில், பயிற்சியாளராக நடித்திருந்த சிவ கார்த்திகேயன், இந்திய மகளிர் அணி வீராங்கனை ஐஷ்வர்யா ராஜேஷிடம், ”உன்னால் முடியாது என்று யாராவது உன்னிடம் சொன்னால், நீ நம்ப வேண்டியது அவர்களை அல்ல; உன்னை” என்பார். 

கிரேக் சேப்பல் தீபக் சாஹரை மட்டம்தட்டியது, இப்போது தீபக் சாஹர் வெற்றி நாயகனாக உருவெடுத்திருப்பது, கனா பட வசனத்தை நினைவுபடுத்துகிறது. அந்த சினிமா வசனத்தின் நிஜ வெர்சன் தான் தீபக் சாஹர்.
 

click me!