நான் செய்த 2 தவறு தான் இந்தியாவை தோற்கடித்தது..! இப்போதுவரை எனக்கு உறுத்தலாவே இருக்கு.. ஸ்டீவ் பக்னர் வருத்தம்

By karthikeyan VFirst Published Jul 19, 2020, 9:02 PM IST
Highlights

2008 சிட்னி டெஸ்ட்டில் தான் செய்த 2 தவறுகள் தான் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்க காரணம் என்று முன்னாள் அம்பயர் ஸ்டீவ் பக்னர் தெரிவித்துள்ளார். 
 

வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த அம்பயர் ஸ்டீவ் பக்னர், 128 சர்வதேச டெஸ்ட் மற்றும் 181 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அம்பயரிங் செய்துள்ளார். மிகவும் பிரபலமான மற்றும் மிகச்சிறந்த அம்பர்களில் ஸ்டீவ் பக்னரும் ஒருவர். 

இந்நிலையில், தனது கெரியரில் ஒரே டெஸ்ட்டில் தான் செய்த 2 தவறுகள் போட்டியின் முடிவையே மாற்றிவிட்டது குறித்து பேசியுள்ளார். 2008ல் சிட்னியில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த சர்ச்சைக்குரிய டெஸ்ட் தான் அது. அந்த டெஸ்ட்டில் தான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸை குரங்கு என்று ஹர்பஜன் சிங் திட்டியதாக சர்ச்சை எழுந்து, பெரியளவில் வெடித்தது. பல சர்ச்சைகளுக்குள்ளான அந்த போட்டியில், ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் தனது 2 தவறான முடிவுகள், போட்டியின் முடிவையே மாற்றியதாக ஆங்கில ஊடகத்தில் அம்பயர் ஸ்டீவ் பக்னர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அம்பயர் ஸ்டீவ் பக்னர், அந்த போட்டியில் நான் செய்த முதல் தவறு - ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஒருவரை சதமடிக்கவிட்டது. இரண்டாவது தவறு - கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய வீரருக்கு தவறுதலாக அவுட் கொடுத்தது. இந்த இரண்டும் தான் அந்த போட்டியின் முடிவை மாற்றிவிட்டது. அந்த 2 தவறான முடிவுகளும் இன்றுவரை எனது மனதை உறுத்திக்கொண்டிருக்கிறது என்று ஸ்டீவ் பக்னர் தெரிவித்தார். 

ஸ்டீவ் பக்னர் சொன்ன அந்த முதல் தவறு, ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு அவுட் கொடுக்க தவறிவிட்டார் ஸ்டீவ் பக்னர். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 30 ரன்களில் இஷாந்த் சர்மாவின் பந்தில் அவுட். ஆனால் அதற்கு ஸ்டீவ் பக்னர் அவுட் கொடுக்கவில்லை. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சைமண்ட்ஸ், அந்த இன்னிங்ஸில் 162 ரன்களை குவித்தார். 30 ரன்களில் அவுட்டாகியிருக்க வேண்டிய சைமண்ட்ஸிற்கு அவுட் கொடுக்காததால் அவர் 162 ரன்களை குவித்தார். ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 463 ரன்களை குவித்தது. அதற்கு முக்கிய காரணம், சைமண்ட்ஸ் தான். 

அதேபோல, அவர் இரண்டாவதாக குறிப்பிட்டது, ராகுல் டிராவிட்டுக்கு தவறாக அவுட் கொடுத்தது. கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி இலக்கை விரட்டியபோது, 103 பந்துகள் பேட்டிங் ஆடி களத்தில் நிலைத்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் டிராவிட்டுக்கு தவறுதலாக அவுட் கொடுத்துவிட்டார். இதையடுத்து 210 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி, 122 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியில் தோற்றது. ராகுல் டிராவிட்டிற்கு ஸ்டீவ் பக்னர் தவறுதலாக அவுட் கொடுக்கவில்லையென்றால், போட்டியின் முடிவு வேறாக இருந்திருக்கும்.
 

click me!