வெற்றி போதையில் கேவலமாக நடந்துகொண்ட வங்கதேச வீரர்கள்.. மைதானத்தில் இந்தியா - வங்கதேச வீரர்கள் மோதல்.. வீடியோ

By karthikeyan VFirst Published Feb 10, 2020, 11:14 AM IST
Highlights

அண்டர் 19 உலக கோப்பை இறுதி போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்ற நிலையில், போட்டிக்கு பின்னர் இந்தியா மற்றும் வங்கதேச அணி வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரு அணி வீரர்களும் மைதானத்தில் மோதிக்கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
 

அண்டர் 19 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடந்தது. இதன் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் சிறப்பாக ஆடி 88 ரன்களை குவித்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி 177 ரன்களை அடித்தது. அவரும் சரியாக ஆடியிருக்கவில்லையென்றால், இந்த ஸ்கோர் கூட வந்திருக்க முடியாது. 177 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. 

178 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்து கொடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு கட்டத்தில் 105 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது வங்கதேச அணி. ஆனால் அந்த அணியின் கேப்டன் அக்பர் அலியின் பொறுப்பான பேட்டிங்கால் அந்த அணி இலக்கை அடித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக அண்டர் 19 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. 

முதன்முறையாக அண்டர் 19 உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில், தலை கால் புரியாமல் கொண்டாடித்தீர்த்தனர் வங்கதேச வீரர்கள். போட்டி முடிவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக, வங்கதேச அணியின் வெற்றி உறுதியானதுமே, அந்த அணி வீரர்கள் பவுண்டரி லைனில் கொண்டாட தொடங்கினர். வின்னிங் ரன்னை அடித்தவுடன், மைதானத்திற்குள் புகுந்து தாறுமாறாக கொண்டாடினர். 

உலக கோப்பையை வெற்றியை கொண்டாடுவது அனைத்து அணிகளுமே செய்யக்கூடியதுதான். அதிலும் அண்டர் 19 வீரர்கள் என்பதால் அவர்கள் கொஞ்சம் ஓவராகவே கொண்டாடுவார்கள். ஆனால் பிரச்னை அதுவல்ல. வெற்றி கொண்டாட்டத்தில், தோல்வியடைந்த இந்திய வீரர்களை அதிகப்பிரசங்கித்தனமான வார்த்தைகளை கூறி கிண்டலடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இந்திய வீரர்கள், வங்கதேச வீரர்களை பதிலுக்கு திட்ட, மைதானத்திலேயே மோதல் மூண்டது. 

இதைக்கண்ட அம்பயர்களும் பயிற்சியாளர்களும் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதற்கிடையே மைதானத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளும் உள்ளே வந்து பிரச்னையை தீர்த்து, இரு அணி வீரர்களையும் அனுப்பிவைத்தனர். இரு அணி வீரர்களும் மைதானத்திலேயே மோதிக்கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீடியோ இதோ.. 

Shameful end to a wonderful game of cricket. pic.twitter.com/b9fQcmpqbJ

— Sameer Allana (@HitmanCricket)

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பேசிய அண்டர் 19 இந்திய அணியின் கேப்டன் பிரியம் கர்க், வெற்றியும் தோல்வியும் ஆட்டத்தில் ஒரு அங்கம். எனவே அது எங்களுக்கு பெரிய விஷயமல்ல. சில போட்டிகளில் ஜெயிப்போம், சில நேரங்களில் தோற்போம். எனவே அது பிரச்னையில்லை.  ஆனால் வங்கதேச வீரர்களின் செயல்பாடுகளும் அணுகுமுறையும் அவர்கள் வெற்றியை கொண்டாடிய விதமும் ரொம்ப மோசம். இது நடந்திருக்கக்கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் என்ன செய்வது? நடந்துவிட்டதே.. ஓகே என்று பிரியம் கர்க் தெரிவித்தார். 

இந்த சம்பவம் குறித்து பேசிய அண்டர் 19 வங்கதேச கேப்டன் அக்பர் அலி, தனது அணி வீரர்களின் மோசமான செயல்பாட்டிற்காக அவர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டார். 
 

click me!