
Temba Bavuma New Record In Test Cricket: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் தறுவாயில் உள்ளது. 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் அந்த அணி முதன்முறையாக ஐசிசி கோப்பையை வெல்வது உறுதியாகி விட்டது.
வெற்றியின் அருகில் தென்னாப்பிரிக்கா
282 ரன்களைத் துரத்திய தென்னாப்பிரிக்க அணி ரியான் ரிக்கெல்டனை ஆரம்பத்தில் இழந்தது. வியான் முல்டரும் 27 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் அந்த அணி மீது மிகுந்த அழுத்தம் இருந்த நிலையில், மார்க்ரம் மற்றும் பவுமா சிறப்பாக விளையாடி அணியை சிக்கலில் இருந்து மீட்டனர். சூப்பர் சதம் விளாசிய மார்க்ரம் 159 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 102 ரன்களுடனும், அரை சதம் விளாசிய பவுமா 121 பந்தில் 5 பவுண்டரியுடன் 65 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
டெம்பா பவுமா புதிய சாதனை
இந்த நிலையில் இந்த போட்டியில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 30+ ரன்களை அடித்த 2வது வீரர் என்ற சாதனையை பவுமா படைத்தார். அதாவது பவுமா தொடர்ந்து 9 இன்னிங்சில் 30+ ரன்களை அடித்துள்ளார். ஏற்கெனவே தொடர்ந்து 9 இன்னிங்சில் 30+ ரன்களை அடித்திருந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இங்கிலாந்து முன்னாள் வீரர் டெட் டெக்ஸ்டர் 11 இன்னிங்சில் தொடர்ச்சியாக 30+ ரன்களை அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
பாபர் அசாம், ஸ்டீவ் ஸ்மித்
பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தொடர்ச்சியாக 8 இன்னிங்சில் 30+ ரன்களை அடித்துள்ளனர். தென்னாப்பிரிக்கா 27 ஆண்டுகளில் முதல் ஐசிசி பட்டத்தை தட்டித் தூக்க ரெடியாக உள்ளது. இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான முறை பாதிக்கப்பட்டுள்ளது, 2024 இல் ஆண்கள் டி20 உலகக் கோப்பையையும் 2023 மற்றும் 2025 இல் பெண்கள் டி20 உலகக் கோப்பையையும் இழந்தது.
27 ஆண்டு கால சோகம் முடிவுக்கு வருகிறது
ஆண்கள் அணி 2023 இல் ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் தோற்றது. இப்போதும் முதல் இன்னிங்ஸில் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு தென்னாப்பிரிக்காவின் கதை முடிந்தது என அனைவரும் நினைத்தனர். ஆனால் ரபடாவின் அபார பந்துவீச்சின் மூலம், மார்க்ரமின் சூப்பர் பேட்டிங் மூலமும் தென்னாப்பிரிக்கா வெற்றியின் அருகில் உள்ளது.