ஷாருக்கான் அபாரம்.. சுந்தர் சூப்பர்.. இறுதி போட்டியில் தமிழ்நாடு அணி

By karthikeyan VFirst Published Oct 24, 2019, 11:39 AM IST
Highlights

விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. 
 

பெங்களூரு ஜஸ்ட் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் தமிழ்நாடு அணிக்கும் குஜராத் அணிக்கும் இடையேயான அரையிறுதி போட்டி நடந்தது.  மழை காரணமாக 10 ஓவர்கள் குறைக்கப்பட்டு 40 ஓவர் போட்டியாக இது நடத்தப்பட்டது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணியின் நட்சத்திர மற்றும் தொடக்க வீரர்களான பார்த்திவ் படேல் மற்றும் பிரியங்க் பன்சால் ஆகிய இருவரும் சரியாக ஆடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். த்ருவ் ராவல் அதிகபட்சமாக 40 ரன்களும் அக்ஸர் படேல் 37 ரன்களும் அடித்தனர். இதையடுத்து அந்த அணி 40 ஓவரில் 177 ரன்கள் அடித்தது. 

178 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய பாபா அபரஜித்தும் இந்த போட்டியில் சரியாக ஆடவில்லை. அவரும் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் அபினவ் முகுந்த் தன் பங்கிற்கு 32 ரன்கள் அடித்தார். 

கேப்டன் தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, அதன்பின்னர் வாஷிங்டன் சுந்தரும் ஷாருக்கானும் இணைந்து சிறப்பாக ஆடினர். தமிழ்நாடு அணி 96 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் சுந்தர் - ஷாருக்கான ஜோடி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நின்று தமிழ்நாடு அணியை வெற்றி பெற செய்தனர். 

இவர்களது பொறுப்பான ஆட்டத்தால் 39வது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, இறுதி போட்டிக்கு முன்னேறியது. வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் முறையே 27 மற்றும் 56 ரன்கள் அடித்தனர். 
 

click me!