இப்ப அந்த வீடியோவை பார்த்தால் கூட உடம்பெல்லாம் புல்லரிக்குது..! ஜொலிக்காத வாரிசு வீரரின் ரெக்கார்டு ஸ்பெல்

By karthikeyan VFirst Published Jul 25, 2020, 8:27 PM IST
Highlights

ஒருநாள் கிரிக்கெட்டில் தனது பெஸ்ட் பவுலிங்கின் வீடியோவை இன்று பார்த்தால் கூட, உடம்பெல்லாம் புல்லரிப்பதாக ஸ்டூவர்ட் பின்னி தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவின் வெற்றிகரமான முன்னாள் வீரர்களில் ஒருவரான ரோஜர் பின்னியின் மகன் தான் ஸ்டூவர்ட் பின்னி. ரோஜர் பின்னி வெற்றிகரமான கிரிக்கெட்டர். 1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆடியவர். ஆனால் அவரது வாரிசான ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி இந்திய கிரிக்கெட்டில் ஜொலிக்கவில்லை. 

இந்திய அணிக்காக வெறும் 6 டெஸ்ட் மற்றும் 14 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அவர் இந்திய அணிக்காக பெரியளவில் ஆடவில்லையென்றாலும், ஆடிய குறைந்த போட்டிகளில் சிறப்பான சாதனை ஒன்றை செய்துவிட்டார். 

2014ல் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணியில் ஸ்டூவர்ட் பின்னியும் இருந்தார். அந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 4.4 ஓவர்கள் வீசி வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அபார சாதனை படைத்தார். ஸ்டூவர்ட் பின்னியின் அருமையான பவுலிங்கால், 58 ரன்களுக்கு வங்கதேச அணியை ஆல் அவுட் செய்து, முதலில் பேட்டிங் ஆடி 105 ரன்கள் மட்டுமே அடித்திருந்த இந்திய அணி, டி.எல்.எஸ் முறைப்படி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆங்கில ஸ்போர்ட்ஸ் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஸ்டூவர்ட் பின்னி, தனது பெஸ்ட் பவுலிங் குறித்து பேசிய ஸ்டூவர்ட் பின்னி, உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அந்த வீடியோவை இப்போது பார்த்தால் கூட எனக்கு மெய்சிலிர்க்கிறது. எனது கிரிக்கெட் கெரியரில் அதைவிட சிறந்த தினம் இருக்கமுடியாது. இந்திய அணி அந்த போட்டியில் குறைவான ஸ்கோரே அடித்திருந்ததால், முதல் பந்திலிருந்தே அணியின் மீது அழுத்தம் இருந்தது. இடையில் மழை பெய்து மீண்டும் ஆட்டம் தொடர்ந்ததால், ஈரப்பதம் இருந்தது. அது எனது மிதவேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக அமைந்தது என்று ஸ்டூவர்ட் பின்னி தெரிவித்துள்ளார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட் வீழ்த்தியவர்களில் குறைவான ரன்னை கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் வால்ஷுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பது ஸ்டூவர்ட் பின்னிதான். இந்திய வீரரின் சிறந்த பவுலிங் இதுதான்.
 

click me!