சச்சினுக்கு நிகரான வீரர் டிராவிட்..! எப்பேர்ப்பட்ட பவுலரையும் தாளிச்சு எடுத்துருவாப்ள.. ஸ்டீவ் வாக் புகழாரம்

By karthikeyan VFirst Published Jan 5, 2021, 6:59 PM IST
Highlights

ராகுல் டிராவிட் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான முக்கியமான வீரர் என்று ஆஸி., முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவில் கவாஸ்கர், சச்சின், கோலி ஆகிய மூவரும் அவரவர் தலைமுறையின் தலைசிறந்த வீரர்களாக அறியப்படுகின்றனர். கபில் தேவ், குண்டப்பா விஸ்வநாத், அசாருதீன், ராகுல் டிராவிட், கங்குலி, சேவாக், யுவராஜ் சிங், லட்சுமணன், தோனி, ரோஹித் சர்மா ஆகியோரும் இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர்.

ரன்கள், சதங்கள் மற்றும் சாதனைகளின் அடிப்படையில், கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர். ஆனால் ரன்களை கடந்து, பேட்டிங் டெக்னிக்கிலும், நெருக்கடியை சமாளித்து ஆடும் மன வலிமையின் அடிப்படையிலும் இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட். ஆனால் அவரது திறமைக்கான அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

1996லிருந்து 2012ம் ஆண்டுவரை இந்திய அணியில் ஆடிய ராகுல் டிராவிட், ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மொத்தமாக 509 சர்வதேச போட்டிகளில் ஆடி, 24208 ரன்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 6வது வீரராக திகழ்கிறார்.

சுயநலமாக ஒரு இன்னிங்ஸ் கூட ஆடாத வீரர் ராகுல் டிராவிட். அணியின் நலனையும் வெற்றியையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆடியவர். ராகுல் டிராவிட் டெக்னிக்கலாக மிகச்சிறந்த பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கருக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர் அல்ல ராகுல் டிராவிட். சச்சின், தோனி மாதிரியான வீரர்கள் ஓவராக தூக்கி கொண்டாடப்பட்டதால், ராகுல் டிராவிட்டின் பெரும் பொதுவெளியில் பெரிதாக பேசப்படவில்லை. சச்சின், கோலியை போல ராகுல் டிராவிட் சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படவில்லை. 

இந்நிலையில், ராகுல் டிராவிட் குறித்து பேசிய ஆஸி., முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், ராகுல் டிராவிட் அதீத கவனக்குவிப்பை கொண்டவர். எந்தவிதத்திலும் ராகுல் டிராவிட்டின் கவனத்தை சிதறடிக்க முடியாது. அப்போதைய இந்திய அணியின் மையமாக இருந்தவர். அனைவரையும் இணைப்பவராக இருந்தார். க்ரீஸில் நிலைத்து நின்று எப்பேர்ப்பட்ட பவுலரையும் அடித்து காலி செய்யக்கூடியவர் டிராவிட்.

ராகுல் டிராவிட்டின் கவனக்குவிப்பு மற்றும் தடுப்பாட்டம் அசைக்க முடியாதது. கடுமையான போட்டி மனப்பான்மை கொண்டவர். குறிப்பாக மிகப்பெரிய மற்றும் முக்கியமான போட்டிகளில் மிகச்சிறப்பாக ஆடுவார். மிகப்பிரபலமான கொல்கத்தா டெஸ்ட்டில் அவரும் லக்‌ஷ்மணும் இணைந்து ஒரு நாள் முழுக்க பேட்டிங் ஆடினர். ஜெயிக்கவே முடியாத போட்டியை இந்தியாவுக்கு ஜெயித்து கொடுத்தனர். இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான முக்கியமான வீரர் ராகுல் டிராவிட். அதுதான் இந்தியாவின் மிகச்சிறந்த பேட்டிங் ஆர்டர் என்று ஸ்டீவ் வாக் ராகுல் டிராவிட்டிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
 

click me!