அதைக்கூட அவரு கொண்டாடல பார்த்தீங்களா.. கிரேட் பிளேயர்.. இங்கிலாந்து வீரரின் செயலை கண்டு பிரமித்த ஸ்டீவ் ஸ்மித்

By karthikeyan VFirst Published Aug 29, 2019, 9:58 AM IST
Highlights

இங்கிலாந்து ஆல்ரவுண்டரின் ஆட்டத்தின் மீதான ஈடுபாட்டையும் வெற்றி வேட்கையையும் வியந்து புகழ்ந்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித். 

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு தனி ஒருவனாக வெற்றியை தேடிக்கொடுத்த பென் ஸ்டோக்ஸை, ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித் புகழ்ந்து தள்ளியுள்ளார். 

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் மழை குறுக்கீட்டால் டிராவில் முடிந்தது. 

இதையடுத்து லீட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை நெருங்கிய ஆஸ்திரேலிய அணியிடமிருந்து தனி ஒருவனாக போராடி அந்த வெற்றியை பறித்தார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 179 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து அணி வெறும் 67 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 112 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்கள் அடித்தது. 

ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 358 ரன்கள் முன்னிலை பெற, 359 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி, 286 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் கடைசி வீரரான ஜாக் லீச்சை ஒருமுனையில் விக்கெட்டை இழந்துவிடாமல் நிறுத்திவிட்டு, அதிரடியை கையில் எடுத்த பென் ஸ்டோக்ஸ், தனி ஒருவனாக போராடி அணியை வெற்றி பெற வைத்தார். கடைசி விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு73 ரன்கள் தேவை. இதில் ஒரு ரன் மட்டுமே ஜேக் லீச் அடித்தார். மற்ற அனைத்து ரன்களையும் ஸ்டோக்ஸ் தான் அடித்தார். 

முதல் 70 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்திருந்த ஸ்டோக்ஸ், 219 பந்துகளில் 135 ரன்கள் என இன்னிங்ஸை அபாரமாக முடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் மீது ஆர்வம் இல்லாத கிரிக்கெட் ரசிகர்களுக்கு, டெஸ்ட் கிரிக்கெட்டின் அருமையை புரியவைத்த இன்னிங்ஸ் அது. பென் ஸ்டோக்ஸின் அபாரமான பேட்டிங்கை முன்னாள் மற்றும் இந்நாள் ஜாம்பவான்கள் பலரும் புகழ்ந்து வருகின்றனர். உலக கோப்பை இறுதி போட்டியிலும் தனி ஒருவனாக போராடி இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஸ்டோக்ஸ், ஆஷஸ் டெஸ்ட்டிலும் அதை மீண்டும் செய்து தனது திறமையை மீண்டுமொரு முறை இந்த உலகிற்கு பறைசாற்றியுள்ளார். 

இந்நிலையில், ஸ்டோக்ஸ் குறித்து பேசிய ஸ்டீவ் ஸ்மித், ஸ்டோக்ஸின் இன்னிங்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு அருமையான விளம்பரம். ஸ்டோக்ஸின் அபாரமான இன்னிங்ஸ் அது. நாங்கள் அந்த போட்டியில் வென்றிருக்கலாம். ஆனால் ஸ்டோக்ஸ் கணிக்கமுடியாத ஆட்டக்காரர். ஆட்டத்தை தலைகீழாக மாற்றிவிட்டார். 

மிகக்கடுமையான மற்றும் சவாலான போட்டியாளர் ஸ்டோக்ஸ். நெருக்கடியான சூழல்களில் அபாரமாக செயல்பட விரும்புகிறார் ஸ்டோக்ஸ். உலக கோப்பை இறுதி போட்டியில் ஒரு அபாரமான இன்னிங்ஸ் ஆடினார். தற்போது மீண்டும் அதேமாதிரியான ஒரு சிறந்த இன்னிங்ஸ். கிரிக்கெட் மீதான அவரது ஈடுபாடும், கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் போராடும் அவரது மனப்பான்மையும் அபாரமானவை. 

ஸ்டோக்ஸ் சதமடித்த போது கூட, அதை கொண்டாடவில்லை. அவர் சதத்தை ஒரு பொருட்டாகக்கூட நினைக்கவில்லை. அவர் சதத்தை கொண்டாடவும் இல்லை. அவரது இலக்கு அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது மட்டும் தான். அதைநோக்கித்தான் பயணித்தாரே தவிர, சதத்தை கூட கொண்டாடவில்லை. ஒரு அணிக்கு என்ன தேவையோ அதை அப்படியே வழங்கக்கூடிய வீரர் ஸ்டோக்ஸ் என்று ஸ்மித் புகழ்ந்தார். 
 

click me!