வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்த இலங்கை.. விருதுகளை அள்ளிய முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Aug 1, 2019, 10:51 AM IST
Highlights

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து இலங்கை அணி தொடரை வென்றது. 

வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி அபாரமாக வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதிரடி தொடக்க வீரர் ஃபெர்னாண்டோ 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். ஆனால் கருணரத்னே சிறப்பாக ஆடி 46 ரன்களையும் குசால் பெரேரா 42 ரன்களையும் அடித்து அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர் குசால் மெண்டிஸ் மற்றும் சீனியர் வீரர் மேத்யூஸ் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த குசால் மெண்டிஸ் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 101 ரன்களை குவித்தனர். 

தொடர்ந்து சிறப்பாக ஆடிய மேத்யூஸ் 90 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 87 ரன்களை குவித்தார். 13 ரன்களில் சதத்தை தவறவிட்டு கடைசி ஓவரின் முதல் பந்தில் மேத்யூஸ் ஆட்டமிழந்தார். இதையடுத்து இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 294 ரன்களை குவித்தது. 

295 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் சௌமியா சர்க்காரை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. அவர் மட்டுமே 69 ரன்கள் அடித்தார். அவரை தவிர மூன்றே மூன்று வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்னே அடித்தனர்.  மற்றவர்கள் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேற, 36 ஓவர்களில்  172 ரன்களுக்கே வங்கதேச அணி ஆல் அவுட்டானது. இதையடுத்து இலங்கை அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது. 

இந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் மேத்யூஸ் தேர்வு செய்யப்பட்டார். 
 

click me!