சொற்ப ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா.. ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடுகிறது

By karthikeyan VFirst Published Oct 21, 2019, 1:59 PM IST
Highlights

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

ராஞ்சியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 497 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி, இரண்டாம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் அடித்திருந்தது. இரண்டாம் நாளில் வெறும் 5 ஓவர்கள் மட்டுமே ஆடியது தென்னாப்பிரிக்க அணி. ஆனால் அதற்குள்ளாக 2 விக்கெட்டுகளை இழந்தது. 

மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தை டுப்ளெசிஸும் ஹம்ஸாவும் தொடர்ந்தனர். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே டுப்ளெசிஸ் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதையடுத்து ஹம்ஸாவுடன் பவுமா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அடித்து ஆடி ரன்களை சேர்த்தது. குறிப்பாக ஹம்ஸா, இந்திய அணியின் பவுலிங்கை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அடித்து ஆடினார். எளிதாக பவுண்டரிகளை விளாசி ஸ்கோர் செய்த அவர், அரைசதம் அடித்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த அவர், 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 62 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஜடேஜாவின் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். 

அவர் அவசரப்படாமல் நிதானமாக ஆடியிருந்தால், இன்னும் நன்றாக ஸ்கோர் செய்திருப்பார். அணியையும் வலுவான நிலைக்கு அழைத்து சென்றிருப்பார். ஏனெனில் அவரது ஆட்டம் மிகவும் தெளிவாக இருந்தது. சிறப்பாக பேட்டிங் செய்த அவர், அனைத்து பந்துகளிலும் ரன் எடுக்கும் முனைப்பில் ஆடியதால்தான் அவுட்டானாரே தவிர, தடுப்பாட்டம் ஆடியிருந்தால் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடித்திருப்பார். 

ஹம்ஸா அவுட்டானதும், அவருடன் இணைந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த பவுமாவும் 32 ரன்களில் வீழ்ந்தார். பவுமாவின் விக்கெட்டை அறிமுக வீரர் நதீம் வீழ்த்தினார். இதையடுத்து களத்திற்கு வந்த கிளாசனையும் 6 ரன்களில் ஜடேஜா வீழ்த்தினார். அதன்பின்னர் டேன் பீட்டை ஷமி வீழ்த்த, ரபாடா ரன் அவுட்டாகி வெளியேறினார். 

130 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது தென்னாப்பிரிக்க அணி. அதன்பின்னர் லிண்டேவும் நோர்ட்ஜேவும் இணைந்து ஓரளவிற்கு ஆடினர். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 32 ரன்கள் சேர்த்தது. லிண்டேவை 37 ரன்களில் உமேஷ் வீழ்த்த, நோர்ட்ஜேவை நதீம் வீழ்த்தி இன்னிங்ஸை முடித்துவைத்தார். 

162 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆனை தவிர்க்க தவறியது தென்னாப்பிரிக்க அணி. இந்திய அணி ஃபாலோ ஆன் வழங்கியதை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது தென்னாப்பிரிக்க அணி. 
 

click me!