நேரம் ஆக ஆக தலை வலிக்குது.. தொடும்போது கழுத்தும் வலிக்குது - உடல்நிலை குறித்து ஸ்மித் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Aug 19, 2019, 2:12 PM IST
Highlights

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சரின் பவுன்ஸரில் கழுத்து பகுதியில் அடிவாங்கிய ஸ்மித், தனது உடல்நிலை குறித்தும் ஃபிட்னெஸ் குறித்தும் பேசியுள்ளார். 

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆர்ச்சர், 148 கிமீ வேகத்தில் வீசிய பவுன்ஸர், ஸ்மித்தின் பின் கழுத்தில் அடித்தது. உடனே நிலைகுலைந்து கீழே விழுந்தார். அந்த இன்னிங்ஸில் 92 ரன்கள் அடித்த ஸ்மித், இரண்டாவது இன்னிங்ஸில் ஆடவில்லை. 

ஐசிசி-யின் புதிய விதிப்படி சப்ஸ்டிடியூட் பேட்ஸ்மேன் இறங்கலாம் என்பதால், இந்த விதிப்படி முதன்முறையாக ஸ்மித்துக்கு பதிலாக லாபஸ்சாக்னே இரண்டாவது இன்னிங்ஸில் இறங்கினார். அவர் நன்றாக ஆடினார். போட்டியும் டிராவில் முடிந்துவிட்டது. 

அடுத்த(மூன்றாவது) டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து பேசிய ஸ்மித், இரவு லேசாக தலை வலிக்க ஆரம்பித்தது. நான் ஆழ்ந்து அதிகநேரம் தூங்கமாட்டேன். ஆனால் நேற்று நன்றாக தூங்கினேன். தூங்கி எழுந்த பின் மீண்டும் தலைவலிக்க ஆரம்பித்தது. அதனால் சில டெஸ்ட்டுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. எனது உடல்நிலை தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அதனால் தான் நான் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடவில்லை. 

எனது கழுத்தில் முன்பு வலியில்லை. ஆனால் இப்போது நான் தொட்டாலோ அல்லது வேறு யாராவது தொட்டாலோ வலிக்கிறது. அதனால்தான் தலையும் வலிக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்த 5-6 நாட்களுக்கு ஃபிசியோக்களின் முழு கண்காணிப்பில் இருப்பேன். அடுத்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகிவிடுவேன் என நம்புகிறேன். ஆனால் ஃபிசியோ சொல்வதில்தான் உள்ளது என்று ஸ்மித் தெரிவித்தார்.
 

click me!