எதிரணியை ஜெயிக்கவச்சு எங்களை வெளியில் அனுப்பத்தான் பார்ப்பாங்க.. இந்திய அணி மீது மற்றுமொரு பாகிஸ்தான் முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு

By karthikeyan VFirst Published Jun 29, 2019, 4:42 PM IST
Highlights

இந்திய அணியின் மீது பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி முன்வைத்த அதே விமர்சனத்தை மற்றொரு முன்னாள் வீரரும் முன்வைத்துள்ளார். 

உலக கோப்பை தொடரை படுமோசமாக தொடங்கிய பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் மீண்டெழுந்து அரையிறுதி வாய்ப்பை வலுவாக தக்கவைத்துள்ளது. 

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கியது. அதன்பின்னர் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இலங்கைக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக  தோல்வியை தழுவியது. இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அள்ளி தூற்றினர். அதன்பின்னர் வெகுண்டெழுந்த பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி வென்றது. பாகிஸ்தான் அணி தொடர் வெற்றிகளை பெற்ற அதேவேளையில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்றது. 

பாகிஸ்தான் அணி 7 போட்டிகளை ஆடியுள்ள நிலையில், 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளை பெற்றுள்ளது. எஞ்சிய 2 போட்டிகளில் ஒன்றில், இன்று ஆஃப்கானிஸ்தானுடன் ஆடிவருகிறது பாகிஸ்தான். கடைசி போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்துவதற்கு வாய்ப்புள்ளது. 

அதேநேரத்தில் எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியோ, இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய வலுவான அணிகளை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் இங்கிலாந்து அணி தோற்றால், பாகிஸ்தான் அணி இரண்டிலும் வென்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

எனவே இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தி, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற உதவ வேண்டும் என்று ஷோயப் அக்தர் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்நிலையில், இந்திய அணி பாகிஸ்தான் அரையிறுதிக்கு வருவதை விரும்பாது. அதனால் வங்கதேசம், இலங்கை அணிகளிடம் வேண்டுமென்றே தோற்று பாகிஸ்தானை தொடரை விட்டு வெளியேற இந்திய அணி நினைக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கருத்து தெரிவித்திருந்தார். 

அணிகள் அவற்றின் விருப்பத்திற்கேற்ப ஜெயிப்பதும் தோற்பதும் ஃபேஷனாகிவிட்டது. ஆஃப்கானிஸ்தான் போட்டியில் இந்திய அணி எப்படி வென்றது என்று பார்த்தீர்கள். இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா என்ன செய்தது? வார்னர் என்ன செய்தார்? என கேள்வி எழுப்பிய பாசித் அலி, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வருவதை இந்தியா விரும்பாது என தெரிவித்தார். அதற்காக வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளிடம் வேண்டுமென்றே தோற்கக்கூடும். 1992 உலக கோப்பையில் சொந்த மண்ணில் அரையிறுதி போட்டியை ஆடவேண்டும் என்பதற்காக பாகிஸ்தானிடம் வேண்டுமென்றே தோற்றது நியூசிலாந்து என்றும் பாசித் அலி தெரிவித்திருந்தார். 

பாசித் கூறிய அதே கருத்தைத்தான் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சிக்கந்தரும் கூறியுள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசியுள்ள சிக்கந்தர், பாகிஸ்தானை அரையிறுதிக்குள் நுழையவிடக்கூடாது என்பதற்காகவே இந்திய அணி மற்ற எதிரணிகளிடம் தோற்கும் என தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் டீம் ஸ்பிரிட்டையும் ஸ்போர்ட்ஸ்மென்ஷிப்பையும் அசிங்கப்படுத்தும் விதமாக பாசித் அலியும் சிக்கந்தரும் பேசியிருப்பது இந்திய ரசிகர்களை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. 

click me!