என்னப்பா இது..? இப்படி ஆடிகிட்டு இருக்க..? ஷ்ரேயாஸ் ஐயரின் ஷாட்டை கடிந்த ராகுல் டிராவிட்.. சுவாரஸ்ய பகிர்வு

By karthikeyan VFirst Published Apr 5, 2020, 11:02 PM IST
Highlights

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டராக உருவெடுத்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர், தனது பேட்டிங்கை முதன்முதலில் பார்த்தபோது ராகுல் டிராவிட் தன்னை கடிந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
 

யுவராஜ் சிங்கிற்கு பிறகு அவரது இடத்தை நிரப்ப சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கிடைக்காமல் இந்திய அணி, 2 ஆண்டுகளாக தவித்துவந்த நிலையில், இந்திய அணியின் பிரச்னைக்கு தீர்வாக கிடைத்தவர் ஷ்ரேயாஸ் ஐயர்.

ஒருநாள் அணியில் நான்காம் வரிசையில் சிறப்பாக ஆடி தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டதுடன், அணியின் மிடில் ஆர்டருக்கு வலுவும் சேர்த்தார். ஆரம்பத்தில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்தால், மிடில் ஓவர்களில் சிங்கிள் ரொடேட் செய்து டீசண்ட்டான ஸ்கோரை அணியை எடுக்கவைக்கும் ஷ்ரேயாஸ் ஐயர், அணி நல்ல நிலையில் இருந்தால், கடைசி நேரத்தில் இறங்கினால் கூட, அடித்து ஆடி மளமளவென ஸ்கோர் செய்யும் திறன் படைத்தவர். 

சூழலுக்கு ஏற்றவாறு ஆடியதால், அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று அணியில் தனக்கான இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டார் ஷ்ரேயாஸ் ஐயர். 

இந்நிலையில், தனது பேட்டிங்கை முதல்முறையாக ராகுல் டிராவிட் பார்த்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். கிரிக்கெட் இணையதளத்துக்கு பேட்டியளித்த ஷ்ரேயாஸ் ஐயர், நான்கு நாள் போட்டி ஒன்றில் நான் ஆடியபோது, முதன்முறையாக எனது பேட்டிங்கை அப்போதுதான் ராகுல் டிராவிட் பார்த்தார். 

4 நாள் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் நான் 30 ரன்களை கடந்து களத்தில் இருந்தேன். அன்றைய நாள் ஆட்டத்தின் கடைசி ஓவர் என்பதால், நான் தடுப்பாட்டம் ஆடி அந்த ஓவரை கடத்திவிட்டு வருவேன் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் அந்த ஓவரில் காற்றில் தூக்கிவீசப்பட்ட ஒரு பந்தை இறங்கிவந்து சிக்ஸர் அடித்தேன். டிரெஸ்ஸிங்  ரூமில் அனைவரும் கைதட்டி உற்சாகத்துடன் பாராட்டினர்.

ஆனால், அன்றைய ஆட்டம் முடிந்துவந்ததும், என்னிடம் வந்த டிராவிட், பாஸ் என்ன இதெல்லாம்..? இன்றைய நாளின் கடைசி ஓவர் இது.. இப்படியா ஆடுவது என்று லேசாக கடிந்துகொண்டார். ஆனால் அதன்பின்னர் தான் அவர் கடிந்ததன் அர்த்தமும் அதன் அவசியமும் எனக்கு புரிந்தது. எனது இயல்பான ஆட்டத்தை ஆடத்தான் பிடிக்கும். எனது இயல்பான ஆட்டத்தை ஆடுவதுதான் எனது பலமும் கூட. ஆனால் எனது பேட்டிங் சோம்பேறித்தனமாக இருக்கிறது என்று சிலர் விமர்சிக்கிறார்கள் என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.
 

click me!