ஜாகீர் கான், இஷாந்த் சர்மாவை தூக்கியடித்து புதிய சாதனை படைத்த ஷமி

By karthikeyan VFirst Published Sep 2, 2019, 11:08 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஷமி. இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் அடித்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய கொஞ்ச நேரத்தில் கார்ன்வாலின் விக்கெட்டை வீழ்த்தினார் ஷமி. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஹனுமா விஹாரியின் அபார சதம் மற்றும் விராட் கோலி, மயன்க் அகர்வால், இஷாந்த் சர்மா ஆகியோரின் பொறுப்பான அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட்  இண்டீஸ் அணி, இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்து, மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்பாகவே, 117 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

299 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் அடித்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்திய அணி மொத்தமாக 467 ரன்கள் முன்னிலை பெற்றதால் 468 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் அடித்துள்ளது. 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஷமி. இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் அடித்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய கொஞ்ச நேரத்தில் கார்ன்வாலின் விக்கெட்டை வீழ்த்தினார் ஷமி. இது ஷமியின் 150வது டெஸ்ட் விக்கெட். 

இதன்மூலம் விரைவில் 150 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஷமி பெற்றுள்ளார். ஷமி தனது 42வது போட்டியில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த பட்டியலில் 39 போட்டிகளில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய கபில் தேவ் முதலிடத்திலும் 40 போட்டிகளில் எட்டிய ஜவகல் ஸ்ரீநாத் இரண்டாமிடத்திலும் உள்ளனர். ஏற்கனவே மூன்றாமிடத்தில் இருந்த ஜாகீர் கானை பின்னுக்குத்தள்ளி ஷமி அந்த இடத்தை பிடித்துள்ளார். 49 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாகீர் கான் நான்காமிடத்திலும் 54 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய இஷாந்த் சர்மா ஐந்தாமிடத்திலும் உள்ளனர். 

click me!