இவ்வளவு மொக்கையாவா ஆடுறது..? தோனியை விளாசிய சேவாக்

By karthikeyan VFirst Published Jun 28, 2019, 3:27 PM IST
Highlights

மிடில் ஓவர்களில் தோனியின் பேட்டிங் மந்தமாகவே உள்ளது. மிடில் ஓவர்களில் சிங்கிள் ரொடேட் செய்து ஆடாமல் நிறைய டாட் பந்துகளை விடுகிறார் தோனி. 

உலக கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இனிமேல் இந்திய அணி அரையிறுதிக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. 

உலக கோப்பையில் பேட்டிங்கைவிட இந்திய அணியின் பவுலிங் தான் மிரட்டலாக உள்ளது. புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் மிரட்டினர். புவனேஷ்வர் குமார் காயத்தால் விலகியதை அடுத்து இந்திய அணியில் இடம்பிடித்த ஷமி, அவரை விட ஒரு படி மேலே போய் மிரட்டுகிறார். 

இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த மிடில் ஆர்டர் தொடர்ந்து சிக்கலாகவே இருக்கிறது. ஆனால் தோனி மட்டுமே நிலையான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரொம்ப நிதானமாக ஆடி 52 பந்துகளில் 28 ரன்கள் அடித்து, பந்துக்கும் ரன்னுக்கும் இடையேயான வித்தியாசத்தை ஈடுகட்ட, டெத் ஓவர்கள் வரை களத்தில் இல்லாமல் பந்துகளை முழுங்கிவிட்டு ஆட்டமிழந்தார் தோனி. இதையடுத்து தோனியின் மந்தமான பேட்டிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 

ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 140 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் கோலியும் 72 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு பொறுப்பு தோனியின் மீது இறங்கியது. இந்த முறையும் சற்று மந்தமாகவே ஆடிய தோனி, அவுட்டாகாமல் கடைசிவரை களத்தில் நின்றார். அதனால் கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி ஸ்கோரை உயர்த்தி கொடுத்தார்.

ஆனாலும் மிடில் ஓவர்களில் அவரது பேட்டிங் மந்தமாகவே உள்ளது. மிடில் ஓவர்களில் சிங்கிள் ரொடேட் செய்து ஆடாமல் நிறைய டாட் பந்துகளை விடுகிறார் தோனி. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி - கேதர் ஜோடி மந்தமாக ஆடியதை மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரே விமர்சித்திருந்தார். தோனி - கேதர் ஜாதவின் மந்தமான பேட்டிங் குறித்த அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகவும் தோனி மந்தமாகவே ஆடினார். ஃபேபியன் ஆலமின் ஸ்பின் பவுலிங்கில் 2 முறை ஸ்டம்பிங் ஆகியிருக்க வேண்டியவர். வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஹோப்பின் மோசமான கீப்பிங்கால் தப்பினார். ஸ்பின் பவுலிங்கை கொஞ்சம் அதிகமாகவே தடுத்து ஆடுகிறார் தோனி. ஸ்பின் பவுலிங்கை அதிகமாக தடுத்து ஆடாமல் அடித்து ஆட வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார். 

தோனி ஸ்பின் பவுலிங்கை ஆடும் விதத்தால் அதிருப்தியடைந்த சேவாக் ஒரு டூவிட் செய்துள்ளார். அதில், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரஷீத் கானின் முதல் 4 ஓவர்களில் 25 ரன்கள் எடுக்கப்பட்டது. ஆனால் அடுத்த 6 ஓவர்களில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. அதேபோலவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் ஃபேபியன் ஆலனின் ஸ்பின்னில் முதல் 5 ஓவர்களில் 34 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்த 5 ஓவர்களில் வெறும் 18 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இந்தளவிற்கு ஸ்பின் பவுலிங்கை தடுத்து ஆடக்கூடாது என்று தோனியை சாடியுள்ளார் சேவாக். 

Rashid Khan had gone for 25 in 4 overs , gave away only 13 in his next 6 and today Fabian Allen had given 34 in 5 overs, only 18 in next 5. Can't be so defensive against the spinners.

— Virender Sehwag (@virendersehwag)
click me!