தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு அவருதான் சரியான ஆளு.. ஃப்ளாஷ்பேக்கை ஓட்டிக்காட்டி சேவாக் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 22, 2019, 1:48 PM IST
Highlights

தேர்வுக்குழு தன்னிச்சையாக செயல்படவில்லை என்பதுதான் மிகப்பெரிய ஜாம்பவான்களின் பகிரங்க குற்றச்சாட்டு. தேர்வுக்குழுவின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், புதிய தேர்வுக்குழு தலைவராக யாரை நியமிக்கலாம் என சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 
 

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடையவுள்ள நிலையில், தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான நேர்காணலை தேர்வுக்குழு நடத்தி முடித்துவிட்டது. இன்று பயிற்சியாளர்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இந்த தேர்வுக்குழு அதன் பதவிக்காலத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. உலக கோப்பை அணி தேர்வு உட்பட பலமுறை கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

தேர்வுக்குழு தன்னிச்சையாக செயல்படாமல் அணி நிர்வாகத்தின் விருப்பத்திற்கேற்ப செயல்பட்டது, கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. உலக கோப்பை அணியில் கடைசி நேரத்தில் ராயுடுவின் நீக்கம், தினேஷ் கார்த்திக்கின் சேர்ப்பு, விஜய் சங்கருக்கு பதிலாக மயன்க் அகர்வாலை எடுத்தது என அணி தேர்வு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. 

தேர்வுக்குழு தன்னிச்சையாக செயல்படவில்லை என்பதுதான் மிகப்பெரிய ஜாம்பவான்களின் பகிரங்க குற்றச்சாட்டு. தேர்வுக்குழுவின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், புதிய தேர்வுக்குழு தலைவராக யாரை நியமிக்கலாம் என சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள சேவாக், தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு அனில் கும்ப்ளே சரியான தேர்வாக இருப்பார் என கருதுகிறேன். சச்சின், கங்குலி, டிராவிட் ஆகிய ஜாம்பவான்களுடன் ஆடிய கும்ப்ளே, அவர்களுடன் அதிகமான நேரத்தை செலவிட்டிருக்கிறார். அதேபோல இளம் வீரர்களுக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவ்வாறு மிகப்பெரிய ஜாம்பவான்கள் மற்றும் இளம் வீரர்கள் ஆகிய இரண்டு தரப்புடனும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் கும்ப்ளே. 

அதுமட்டுமல்லாமல் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கக்கூடியவர் கும்ப்ளே. நான் 2007-08ம் ஆண்டில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில், இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அணியில் எடுக்கப்பட்டிருந்தேன். அந்த சமயத்தில், எனது அறைக்கு வந்த அப்போதைய கேப்டன் கும்ப்ளே, அடுத்த 2 தொடர்களில் நீ கண்டிப்பாக இருப்பாய். அதனால் அழுத்தத்திற்கு ஆளாகாமல் நன்றாக ஆடு என்று நம்பிக்கையை கொடுத்துவிட்டு சென்றார். ஒரு வீரருக்கு இப்படியான நம்பிக்கையை கொடுப்பது தான் அவசியம். அதை கும்ப்ளே செய்வார் என்பதால் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு அவர் தான் சரியான நபர் என சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 

அனில் கும்ப்ளேவின் முக்கியமான குணாதிசயமாக சேவாக் குறிப்பிட்ட இந்த விஷயம் தான், தற்போதிருக்கும் தேர்வுக்குழுவிடம் இல்லவே இல்லாத விஷயம். ரோஹித், கோலி, தவான், பும்ரா, புவனேஷ்வர் குமார் தவிர மற்ற இளம் வீரர்கள் அனைவருமே எப்போது தூக்கப்படுவோம் என்ற பதற்றத்திலேயே இருப்பதுதான், அணியின் நிலைத்தன்மையை பாதிக்கிறது. 
 

click me!