புலிக்கு பிறந்தது பூனையாகுமா..? அண்டர் 14 போட்டியில் 295 ரன்களை குவித்த ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட்

By karthikeyan VFirst Published Dec 21, 2019, 11:40 AM IST
Highlights

ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட், அண்டர் 14 மண்டல போட்டியில் அபாரமாக ஆடி இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார். 

இந்திய அணியின் ஆல்டைம் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் ராகுல் டிராவிட். அவர் ஆடிய காலத்தில் இந்திய அணியை பல இக்கட்டான சூழல்களில் இருந்து மீட்டெடுத்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தவர். தடுப்பாட்டத்திற்கு பெயர்போன அவரை ரசிகர்கள் தடுப்புச்சுவர் என அழைக்கின்றனர். இந்திய அணியின் தடுப்புச்சுவர் டிராவிட். 

கிரிக்கெட்டில் ஆடிய போது, சுயநலத்துடன் ஒரு இன்னிங்ஸ் கூட ஆடாத ஒரு வீரர் டிராவிட். தான் ஆடிய காலத்தில் எப்படி, இந்திய கிரிக்கெட்டுக்காக உழைத்தாரோ, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும், அதே உழைப்பை தொடர்ந்துவருகிறார். அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ ஆகியஅணிகளின் தலைமை பயிற்சியாளராக இருந்து பிரித்வி ஷா, ஷுப்மன் கில், மயன்க் அகர்வால் உள்ளிட்ட பல அபாரமான திறமைசாலிகளை செதுக்கி இந்திய அணிக்கு அனுப்பினார். தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக தனது பணியை தொடர்ந்துவருகிறார். 

இந்திய கிரிக்கெட்டிற்கு வீரராகவும், பயிற்சியாளராகவும் பல வகைகளில் தனது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துவரும் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட், அவரை போலவே மிகப்பெரிய வீரராக வருவதற்கான அனைத்து அடையாளங்களுடனும் அபாரமாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். 

கர்நாடகாவில் நடந்த அண்டர் 14 மண்டல அளவிலான போட்டியில் வைஸ் பிரசிடண்ட்ஸ் லெவன் அணியில் ஆடிவரும் சமித் டிராவிட், தர்வாத் மண்டல அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 250 பந்தில் 201 ரன்களை குவித்த சமித் டிராவிட், இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 94 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக 295 ரன்களை குவித்தார் சமித் டிராவிட். 

பேட்டிங்கில் மட்டுமல்லாமல், பவுலிங்கிலும் அபாரமாக செயல்பட்ட சமித் டிராவிட், இரண்டாவது இன்னிங்ஸில் எதிரணியின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மித வேகப்பந்து வீச்சாளரான சமித் டிராவிட், பவுலிங்கிலும் அசத்துகிறார். இந்த போட்டி டிராவில் முடிந்தது. சமித் டிராவிட் ஆடிய வைஸ் பிரசிடண்ட் லெவன் அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது. எதிரணிக்கு ஒரு புள்ளிதான் கிடைத்தது. 

ராகுல் டிராவிட்டின் மகனான சமித் டிராவிட்டிற்கு கர்நாடக அண்டர் 14 அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் ராகுல் டிராவிட்டின் மகன் என்பதற்காக அல்ல. சமித் டிராவிட் தனது திறமை மற்றும் சீரான சிறப்பான ஆட்டத்தின் மூலம் தனக்கான இடத்தை மாநில அணியில் பிடிக்கவுள்ளார். எதிர்காலத்தில் தனது தந்தையின் நிழலில் இல்லாமல், தனது தனித்த அடையாளத்துடன் தனது திறமையின் மூலம் மட்டுமே இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான அனைத்து திறமைகளும் தகுதியும் சமித் டிராவிட்டிடம் உள்ளது. 
 

click me!