நான் அப்படிலாம் ரிஸ்க் எடுக்கலைனா.. பின்ன எப்படி கோலி மாதிரி ஆளை எல்லாம் தூக்கி அடிக்கிறது..? ரோஹித் சர்மா அதிரடி

By karthikeyan VFirst Published May 26, 2019, 11:49 AM IST
Highlights

ஒருநாள் போட்டிகளில் தொடக்கத்தில் களத்தில் நிலைக்க அதிகநேரம் எடுத்துக்கொண்டாலும், களத்தில் நிலைத்துவிட்டால் ரோஹித் சர்மா ருத்ரதாண்டவம் வேறு லெவலில் இருக்கும். அதனால் தான் அவரால் ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்களை அடிக்க முடிந்தது. 

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஒரு அபாரமான பேட்ஸ்மேன். ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்கிறார். ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேனுக்கான தரவரிசையில் விராட் கோலிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார் ரோஹித் சர்மா. 

ரோஹித் சர்மா சிக்ஸர் அடிப்பதில் வல்லவர். அதிலும் ஷார்ட் பிட்ச் பந்துகளை ரோஹித் சர்மா புல் ஷாட் அடிப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். ரிக்கி பாண்டிங்கிற்கு அடுத்து புல் ஷாட்டுகளை அபாரமாக ஆடுவது ரோஹித் சர்மாதான். மற்ற வீரர்கள் சிக்ஸரை கடுமையாக அடிப்பார்கள். ஆனால் ரோஹித் சர்மா மிகவும் எளிதாக சிக்ஸர் விளாசுவார். 

ஒருநாள் போட்டிகளில் தொடக்கத்தில் களத்தில் நிலைக்க அதிகநேரம் எடுத்துக்கொண்டாலும், களத்தில் நிலைத்துவிட்டால் ரோஹித் சர்மா ருத்ரதாண்டவம் வேறு லெவலில் இருக்கும். அதனால் தான் அவரால் ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்களை அடிக்க முடிந்தது. அந்த மூன்று இரட்டை சதங்களிலுமே முதல் சதமடிக்க 100 பந்துகளுக்கு மேல் எடுத்துக்கொண்ட ரோஹித், அடுத்த சதத்தை வெறும் 30-40 பந்துகளில் அடித்திருக்கிறார். 

ரோஹித் சர்மாவின் ஒருநாள் பேட்டிங் டெக்னிக் அபாரமானது. ஆனால் ரோஹித் சர்மா சில நேரங்களில் தொடக்கத்திலேயே தூக்கியடித்து ஆட்டமிழந்துவிடுவார். விராட் கோலி வெற்றிகரமான ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் நம்பர் 1 வீரராகவும் திகழ்வதோடு சதங்களை குவிப்பதற்கு முக்கிய காரணம், அவர் காற்றில் பந்தை தூக்கியடிக்கவே மாட்டார். அரிதாகத்தான் தூக்கியடிப்பார்; அதுவும் பாதுகாப்பாக பவுண்டரியை அடையும். அதுதான் அவரது பேட்டிங் சக்ஸஸ் சீக்ரெட். 

ஆனால் ரோஹித் அப்படி ஆடமாட்டார். பவுண்டரியை விட பெரும்பாலும் சிக்ஸருக்கே செல்வார். இருவரையும் ஒப்பிடமுடியாது. எனினும் ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே அவுட்டாவது, களத்தில் நிலைக்க நிறைய பந்துகளை எடுத்துக்கொள்வது ஆகியவை எல்லாம் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. 

இந்நிலையில், பொதுவெளியில் தனக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் குறித்தும் அதை அவர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் ரோஹித் சர்மா. 

இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, என்னை வெளியில் பார்க்கும் சிலர், கவர் டிரைவ்கள், ஸ்டிரைட் டிரைவ்கள் எப்படி ஆட வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்குவர். நானும் வேறு வழியில்லாமல் பதில் எதுவும் பேசாமல் சரி என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவேன். ஒருவர் என்னிடம் காற்றில் பந்தை அடிக்காதீர்கள் என்று ஆலோசனை கூறினார். நான் சிக்ஸர்களை விளாசுவதால் தான் அவர்கள் எனக்கு இந்த இடத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறார்கள் என்பதே அவர்களுக்கு தெரியவில்லை. 

மற்றொருவர் வந்து ஒரு புள்ளிவிவரத்தை சொன்னார். 2015 உலக கோப்பைக்கு பிறகு நான் 130 சிக்ஸர்களை அடித்திருப்பதாகவும் அதற்கு அடுத்து 55 சிக்சர்கள் தான் இந்திய வீரர் கடந்த 4 ஆண்டுகளில் அடித்த இரண்டாவது அதிகபட்சம் என்று கூறினார். (அந்த 55 சிக்சர்கள் அடித்தது விராட் கோலி). நான் ரிஸ்க் எடுக்கவில்லை என்றால் இதுபோன்று அதிக சிக்ஸர்களை அடித்திருக்க முடியாது. ரிஸ்க் எடுத்ததால்தான் இது சாத்தியமாயிற்று என்று ரோஹித் சர்மா தெரிவித்தார். 
 

click me!