வங்கதேசத்துக்கு எதிரா அப்படி செய்தது ஏன்..? ரோஹித் சர்மா அதிரடி விளக்கம்

By karthikeyan VFirst Published Nov 5, 2019, 4:04 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 
 

டெல்லியில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அனி 148 ரன்கள் அடித்தது. 149 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணி, முஷ்ஃபிகுர் ரஹீமின் பொறுப்பான மற்றும் அதிரடியான பேட்டிங்கால் கடைசி ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

17 ஓவர்கள் வரை ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. கடைசி மூன்று ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. அந்த சூழலில் 18வது ஓவரை சாஹலிடம் கொடுத்தார் ரோஹித் சர்மா. அந்த ஓவரில் முஷ்ஃபிகுர் ரஹீம் மற்றும் மஹ்மதுல்லா ஆகிய இருவரும் தலா ஒரு பவுண்டரியை அடித்தனர். அதனால் அந்த ஓவரில் 13 ரன்கள் அடிக்கப்பட்டது. 

கடைசி இரண்டு ஓவரில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நெருக்கடியான சூழலில் 19வது ஓவரை வீசிய கலீல் அகமது அந்த ஓவரில் 4 பவுண்டரிகளை கொடுத்து, இந்திய அணியின் தோல்வியை அந்த ஓவரிலேயே உறுதிப்படுத்தினர். அந்த போட்டியில் கலீல் அகமதுவை கேப்டன் ரோஹித் சர்மா பயன்படுத்திய விதம் விமர்சனத்துக்குள்ளானது. 

அந்த இரண்டு ஓவர்கள் தான் ஆட்டத்தை இந்திய அணியிடம் இருந்து பறித்தது. கடைசி 6 ஓவர்களில் கலீலுக்கு 3 ஓவர்களை கொடுத்ததற்காக ரோஹித் சர்மா விமர்சிக்கப்பட்டார். அவரது அந்த வியூகம் பலனளிக்காததால் விமர்சனத்திற்கு ஆளானார். 

தீபக் சாஹர் ஆரம்பத்தில் ரன்களை வாரி வழங்கியிருந்தாலும், அவர் நன்றாக ஸ்விங் செய்யக்கூடியவர். அதுமட்டுமல்லாமல் நெருக்கடியான சூழலில் டெத் ஓவர்களை வீசிய அனுபவமும் கொண்டவர். அவரையும் பயன்படுத்தாமல் கலீல் அகமதுவிற்கு கடைசி நேரத்தில் அதிகமான ஓவர்களை கொடுத்தது தவறானது என்ற கருத்து பரவலாக எழுந்தது. 

அதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, கடைசி ஓவர்களை ஸ்பின்னர்களை பயன்படுத்த நான் விரும்பவில்லை. சாஹல் நன்றாக வீசிக்கொண்டிருந்ததாலும் களத்தில் இருந்த 2 பேட்ஸ்மேன்களுமே வலது கை பேட்ஸ்மேன்கள் என்பதாலும்தான் சாஹலுக்கு மட்டும் ஒரு ஓவரை மிச்சம் வைத்திருந்தேன். அதே காரணத்திற்காகத்தான் இடது கை ஃபாஸ்ட் பவுலரான கலீல் அகமதுவிடமும் கொடுத்தேன்.

டி20 போட்டிகளுக்கு இவர்கள்தான் நமது தேர்வு என்பதால்தான் அவர்கள் அணியில் உள்ளார்கள். இதுவரை நன்றாகத்தான் வீசியும் உள்ளார்கள். ஆனால் குறைவான இலக்கை டிஃபெண்ட் செய்யும்போது எப்படி வீச வேண்டும் என அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். திட்டப்படி பந்துவீச வேண்டும். அதையெல்லாம் அவர்கள் இதுமாதிரியான போட்டிகளிலிருந்து கற்றுக்கொள்வார்கள் என ரோஹித் சர்மா தெரிவித்தார். 
 

click me!