ரோஹித்-ராகுல் அதிரடி தொடக்கம்; பாண்டியா-பண்ட் காட்டடி ஃபினிஷிங்! ஆஃப்கானை அலறவிட்டு மெகா ஸ்கோரை அடித்த இந்தியா

By karthikeyan VFirst Published Nov 3, 2021, 9:41 PM IST
Highlights

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் - ராகுல் ஜோடியின் அபாரமான தொடக்கம் மற்றும் ஹர்திக் பாண்டியா - ரிஷப் பண்ட்டின் காட்டடி ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 210  ரன்களை குவித்த இந்திய அணி, 211 ரன்கள் என்ற கடின இலக்கை ஆஃப்கானிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. க்ரூப் 1-ல் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அரையிறுதிக்கு முன்னேற கடும் போட்டி நிலவுகிறது.

க்ரூப் 2-ல் ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய 3 அணிகளுக்குமே வாய்ப்புள்ளது. முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் படுதோல்வி அடைந்த இந்திய அணி, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வெற்றி வேட்கையில் இறங்கியது.

இதற்கு முன் ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் வலுவாக உள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, தன்னம்பிக்கையுடன் இந்திய அணியை எதிர்கொண்டது.

அபுதாபியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி,  இந்த தொடரில் முதல் முறையாக ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 2 மாற்றங்களுடன் களமிறங்கியது. சூர்யகுமார் யாதவ் முழு ஃபிட்னெஸ் அடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியதால், அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் ஆடிய இஷான் கிஷன்  நீக்கப்பட்டார். காயத்தால் வருண் சக்கரவர்த்தி ஆடமுடியாததால், சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணி:

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா.

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், முகமது ஷேஷாத் (விக்கெட் கீப்பர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி (கேப்டன்), குல்பாதின் நைப், ஷராஃபுதின் அஷ்ரஃப், ரஷீத் கான், கரீம் ஜனத், நவீன் உல் ஹக், ஹமீத் ஹசன்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - கேஎல் ராகுல் ஆகிய இருவருமே தொடக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பித்தனர். பவர்ப்ளேயை பயன்படுத்தி அருமையாக பவுண்டரிகளை அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். ஆஃப்கானிஸ்தான் அணியின் அஸ்திரமான ரஷீத் கானை அருமையாக சமாளித்து ஆடி, அவரது முதல் 2 ஓவர்களில் விக்கெட்டை விடாமல் ஆடி, பின்னர் அவரது 3வது ஓவரில் இறங்கிவந்து ரோஹித் சர்மா ஒரு சிக்ஸரை அடித்து, பின்னர் மறுபடியும் ஒரு சிக்ஸர் அடித்தார்.

ரஷீத் கானாலேயே விக்கெட்டை வீழ்த்த முடியாதது ஆஃப்கானிஸ்தான் அணியின் நம்பிக்கையை சிதைத்தது. அதிரடியாக அடித்து ஆடிய ரோஹித் சர்மா, அரைசதம் அடிக்க, அவரைத்தொடர்ந்து ராகுலும் அரைசதம் அடித்தார். ரோஹித் - ராகுலிடமிருந்து எந்த மாதிரியான ஒரு தொடக்கத்தை இந்திய அணியும் ரசிகர்களும் எதிர்பார்த்தார்களோ, அப்படியான ஒரு தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

ரோஹித்துக்கு சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்த நிலையில், 47 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ராகுலும் 69 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணியின் ரன் வேகம் சற்று குறைந்தது.

ஆனால் அதை தொடரவிடாமல் பாண்டியாவும் பண்ட்டும் பார்த்துக்கொண்டனர். ரிஷப் பண்ட்டும் பாண்டியாவும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி, அவர்களது ஃபினிஷிங் ரோலை அருமையாக செய்தனர். பாண்டியா 13 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களும், ரிஷப் பண்ட் 13 பந்தில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 27 ரன்களும் விளாச, 20 ஓவரில் 210  ரன்களை குவித்த இந்திய அணி, 211 ரன்கள் என்ற கடின இலக்கை ஆஃப்கானிஸ்தானுக்கு நிர்ணயித்தது.

இந்த டி20 உலக கோப்பை தொடரில் 200 ரன்களை கடந்த முதல் அணி இந்திய அணி தான். 
 

click me!