நானா இருந்தா அப்படித்தான் பண்ணியிருப்பேன்.. அரையிறுதி போட்டி குறித்து ஹெட் கோச் பதவிக்கு விண்ணப்பித்த முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 28, 2019, 1:54 PM IST
Highlights

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது. 
 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது. 

அரையிறுதியில் இந்திய அணி தோற்றதற்கு தவறான திட்டங்கள் தான் காரணம். 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூவரும் 5 ரன்களுக்கே அவுட்டான நிலையில், ஐந்தாம் வரிசையில் தோனியை இறக்கி ரிஷப் பண்ட்டுடன் பார்ட்னர்ஷிப் அமைக்க வழிசெய்திருக்க வேண்டும். ஆனால் ஐந்தாம் வரிசையில் தினேஷ் கார்த்திக்கையும் ஆறாம் வரிசையில் ஹர்திக் பாண்டியாவையும் இறக்கிவிட்டு இந்திய அணி நிர்வாகம் சொதப்பியது. 

ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகியோரும் அவுட்டாக, 92 ரன்களுக்கே இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருவேளை தோனியை ஐந்தாம் வரிசையில் இறக்கியிருந்தால் நிலைமை மாறியிருக்கும் என்பதே அனைத்து முன்னாள் ஜாம்பவான்களின் கருத்து. 

இந்நிலையில், புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த ராபின் சிங், அந்த நேரத்தில் தான் பயிற்சியாளராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்பதை தெரிவித்துள்ளார். அதுகுறித்து கருத்து தெரிவித்த ராபின் சிங், பந்து நன்றாக ஸ்விங் ஆகும் அந்த ஆடுகளத்தில் கூடுதலாக ஒரு தொடக்க வீரரை எடுத்து அவரை மூன்றாம் வரிசையில் இறக்கியிருப்பேன். ஏனெனில் கோலியின் விக்கெட் முக்கியம்.

அதனால் அதுமாதிரியான கண்டிஷனில் மயன்க் அகர்வாலை எடுத்து அவரை மூன்றாம் வரிசையில் இறக்கிவிட்டு, கோலியை நான்காம் வரிசையிலும் தோனியை ஐந்தாம் வரிசையிலும் இறக்கியிருப்பேன். அப்படி செய்திருந்தால் அவர்கள் இருவரும் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்திருப்பார்கள். அதன்பின்னர் பின்வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ஜடேஜா என்ற மூன்று பவர் ஹிட்டர்கள் இருப்பதால் அவர்கள் அடித்து ஆடியிருப்பார்கள் என்று ராபின் சிங் தெரிவித்துள்ளார். 

தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக மயன்க் அகர்வாலை எடுத்து அவரை மூன்றாம் வரிசையில் இறக்கியிருக்கலாம் என்பது ராபின் சிங்கின் கருத்து.
 

click me!