அவரு சாதாரணமான ஆள் இல்ல.. உங்களுக்கு உலக கோப்பையவே ஜெயிச்சு கொடுப்பாரு!! பாண்டிங்கே சொல்லிட்டாரு.. இனிமேல் மறுபேச்சு எதுக்கு?

By karthikeyan VFirst Published Mar 19, 2019, 3:38 PM IST
Highlights

உலக கோப்பை நெருங்கிய நிலையில், 4ம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகியோர் இறுதி செய்யப்பட வேண்டும். 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான இந்திய அணியில் 12-13 வீரர்கள் உறுதி செய்யப்பட்டு விட்டனர். இன்னும் 2-3 வீரர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட வேண்டும். 

4ம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகியோர் இறுதி செய்யப்பட வேண்டும். மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். அனுபவ விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை காட்டிலும் ரிஷப் பண்ட்டுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் அவர் தான் உலக கோப்பையில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. 

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரிஷப் பண்ட், அதற்குள்ளாக உலக கோப்பை அணியில் எடுக்கப்பட தீவிரமாக பரிசீலிக்கப்படும் அளவிற்கு உயர்ந்திருப்பது அதீத வளர்ச்சி. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரிஷப் பண்ட். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்திய ரிஷப் பண்ட், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிலும் அபாரமாக ஆடினார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடி தனது திறமையை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட், ஒருநாள் அணியிலும் இடம்பிடித்தார். 

பேட்டிங் பெரிதாக இல்லாவிட்டாலும் இதுவரையிலும் ஓரளவிற்கு நன்றாகவே ஆடியுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விக்கெட் கீப்பிங்கில் படுமோசமாக சொதப்பினார். இதையடுத்து ரிஷப் பண்ட் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் தினேஷ் கார்த்திக்கை உலக கோப்பைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற குரல்களும் வலுத்தன. 

உலக கோப்பைக்கான அணி உறுதி செய்யப்பட உள்ள நிலையில், ஐபிஎல் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. எனவே ஐபிஎல்லில் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடுவது அவசியம். இந்நிலையில், ரிஷப் பண்ட் ஐபிஎல்லில் ஆடும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ரிஷப் பண்ட்டை வெகுவாக புகழ்ந்துள்ளார். ரிஷப் பண்ட் உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுக்கக்கூடிய திறன் பெற்றவர் என்று பாண்டிங் புகழ்ந்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணிக்கு 2 முறை உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் பாண்டிங். அவரது வாயிலிருந்து இப்படியொரு வாழ்த்தையும் புகழ்ச்சியையும் பெற்றுவிட்டார் ரிஷப். இதைவிட வேறு என்ன வேண்டும்? 
 

click me!