RCB vs GT: முக்கியமான போட்டியில் பொளந்துகட்டிய கிங் கோலி.! GT-யை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த ஆர்சிபி

By karthikeyan VFirst Published May 19, 2022, 11:10 PM IST
Highlights

குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், மும்பை வான்கடேவில் நடந்த முக்கியமான போட்டியில்  ஆர்சிபியும் குஜராத் டைட்டன்ஸும் மோதின. குஜராத் அணி ஏற்கனவே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி அணி களமிறங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், சாய் கிஷோர், லாக்கி ஃபெர்குசன், யஷ் தயால், முகமது ஷமி.

ஆர்சிபி அணி:

விராட் கோலி, டுப்ளெசிஸ் (கேப்டன்), ரஜாத் பட்டிதர், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், சித்தார்த் கவுல், ஜோஷ் ஹேசில்வுட்.

முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 47 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் அடித்தார். சஹா 22 பந்தில் 31 ரன்களும், டேவிட் மில்லர் 25 பந்தில் 34 ரன்களும் அடிக்க, டெத் ஓவரில் பொளந்துகட்டிய ரஷீத் கான் 6 பந்தில் 19 ரன்களை விளாச, 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. 

வெற்றி கட்டாயத்தில் 169 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரரும் நட்சத்திர வீரருமான விராட் கோலி அபாரமாக பேட்டிங் ஆடினார். இந்த சீசனின் தொடக்கத்திலிருந்து மோசமான ஃபார்மில் ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவந்த கோலியின் ஃபார்ம் ஆர்சிபிக்கு கவலையளித்த நிலையில், முக்கியமான இந்த போட்டியில் ஃபார்முக்கு வந்து அபாரமாக பேட்டிங் ஆடி, தான் ஒரு சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்தார்.

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார் கோலி. முதல் விக்கெட்டுக்கு டுப்ளெசிஸும் கோலியும் இணைந்து 14.3 ஓவரில் 115 ரன்களை குவித்தனர். டுப்ளெசிஸ் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அபாரமாக பேட்டிங் ஆடி 53 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 2சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்து கிட்டத்தட்டவெற்றியை உறுதி செய்துவிட்டு கோலி ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மேக்ஸ்வெல்லும் தினேஷ் கார்த்திக்கும் இணைந்து போட்டியை முடித்தனர். 

8 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி 16 புள்ளிகளை பெற்று 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 14 புள்ளிகளை பெற்றுள்ள டெல்லி அணி கடைசி போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் வெற்றி பெற்றால் நெட்ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபியை பின்னுக்குத்தள்ளி டெல்லி அணி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். ஒருவேளை டெல்லி தோற்றால், ஆர்சிபி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும்.
 

click me!