கடக்கும் காலம்.. கலக்கத்தில் இங்கிலாந்து..! 2-வது டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு சிக்கல்

By karthikeyan VFirst Published Jul 18, 2020, 7:21 PM IST
Highlights

இங்கிலாந்து அணி வெற்றி கட்டாயத்தில் ஆடிவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இயற்கை வெஸ்ட் இண்டீஸுக்கு சாதகமாக செயல்பட்டு, இங்கிலாந்தை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. 
 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

எனவே டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட்டில் ஆடிவருகிறது. கடந்த 16ம் தேதி மான்செஸ்டரில் தொடங்கிய இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் டோமினிக் சிப்ளி ஆகியோரின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து இரண்டாம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் அடித்துள்ளது. இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் அடிக்கவிடாமல் சுருட்டினால், இங்கிலாந்துக்கு இந்த போட்டியில் வெற்றி வாய்ப்புள்ளது. ஆனால் மூன்றாம் நாள் ஆட்டமான இன்றைய ஆட்டத்தின் முதல் செசன் முழுவதும் மழையால் ரத்தானது. உணவு இடைவேளைக்கான நேரம் முடிந்து இரண்டாவது செசன் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இரண்டாவது செசனும் தாமதமாகி கொண்டிருக்கிறது. 

இன்றைய தினம் இனிமேல் ஆட்டம் நடந்தாலும் ஓவர்கள் குறைவாகவே வீசப்படும். நேரம் வீணாவது வெஸ்ட் இண்டீஸுக்கு சாதகமான விஷயம். ஏனெனில் இந்த போட்டி டிரா-வானால், கடைசி போட்டியில் இங்கிலாந்து ஜெயித்தாலும் கூட, தொடர் சமன் தான் அடையுமே தவிர இங்கிலாந்தால் தொடரை வெல்ல முடியாத சூழல் ஏற்படும். 
 

click me!