
கான்பெராவில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், அடிக்கடி மழை குறுக்கிட்டது. தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 14 பந்தில் 4 பவுண்டரியுடன் 22 ரன்கள் எடுத்து அவுட்டாகியிருந்தார்.
இந்திய அணி 4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்பு மழை நின்றவுடன் ஆட்டம் தொடங்கியதும் இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது. பின்னர் இந்திய அணி 9.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அப்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 24 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 39 ரன்களும், சுப்மன் கில் 20 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர். முதலில் லேசாக பெய்த மழை பின்பு வெளுத்து வாங்கியது. நீண்ட நேரமாகியும் மழை விடாததால் முதல் டி20 போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
2வது டி20 போட்டியிலும் மழை பெய்ய வாய்ப்பு
இந்த அறிவிப்பால் போட்டியை நேரில் காண வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2வது டி20 போட்டி மெல்போர்னில் வரும் 31ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. மெல்போர்னிலும் அன்றைய தினம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
மீண்டும் பார்முக்கு திரும்பிய சூர்யகுமார்
மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும் இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் நல்ல விஷயமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார். கடந்த 15 இன்னிங்ஸ்களாக ஒரு போட்டியில் கூட 15 ரன்களை தாண்டாத அவர் இன்றைய போட்டியில் தனது வழக்கமான டிரேட் மார்க் ஷாட்கள் மூலம் 24 பந்தில் 39 ரன்கள் எடுத்துள்ளார்.