பென்ச் தேய்க்கவா அவங்கள டீம்ல எடுத்தது? விளையாடுறதுக்குத்தானே.. அப்புறம் சான்ஸ் கொடுக்காம? டிராவிட் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 29, 2021, 6:53 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான இந்திய அணியில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து கூறியுள்ளார்.
 

விராட் கோலி தலைமையிலான இந்திய மெயின் அணி டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்தில் இருப்பதால், இலங்கை சுற்றுப்பயணத்தில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி ஆடிவருகிறது. சீனியர் வீரர்கள் இங்கிலாந்தில் இருப்பதால், இந்திய அணியில் ஆட தகுதியிருந்தும் இடம் கிடைக்காமல் தவித்த பலருக்கு இந்த தொடர் அருமையான வாய்ப்பாக அமைந்தது.

இலங்கைக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றதன் விளைவாக, 3வது ஒருநாள் போட்டியில் நிதிஷ் ராணா, சேத்தன் சக்காரியா உள்ளிட்ட வீரர்களுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் டி20 தொடரில், கடைசி போட்டிக்கு முன்பாகவே இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைத்தது. 

க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர் உள்ளிட்ட 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதன்விளைவாக 4 வீரர்களுக்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா, சேத்தன் சக்காரியா ஆகிய வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமாகினர்.

ஒரு சுற்றுப்பயணத்தில் அதிகமான வீரர்கள் அறிமுகமானது இந்த தொடரில் தான். இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களில் கிட்டத்தட்ட அனைவருக்குமே ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்த நிலையில், அதிகமான வீரர்களை அறிமுகம் செய்தது குறித்த எதிர்மறை கருத்துகளும் இருந்தன.

அதுகுறித்து பேசிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்,  ஒருநாள் தொடரை வென்றபிறகு, சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தோம். ஆனால் டி20 தொடரில், தொடரை வெல்லும் முன்பாகவே பலரை அறிமுகம் செய்யும் வகையில், சூழல் உருவானது. ஆனால் என்னை பொறுத்தமட்டில், இந்திய அணியில் 15 - 20 வீரர்களில் ஒருவராக இடம்பிடித்த அனைவருமே ஆடும் லெவனில் இடம்பெற தகுதியானவர்கள். 20 வீரர்களை தேர்வாளர்கள் தேர்வு செய்வது, அவர்களில் சிலர் பென்ச்சிலேயே உட்கார்ந்திருப்பதற்காக அல்ல; அவர்களுக்கும் வாய்ப்பு வழங்குவதற்காகத்தான். இதுமாதிரியான வாய்ப்புகளை எப்போதும் கொடுக்க இயலாது. ஆனால் இந்த தொடரில் பெரும்பாலான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிந்தது நல்ல விஷயம் என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
 

click me!