காலிறுதியில் பஞ்சாப்பிடம் படுதோல்வி அடைந்த கர்நாடகா..! முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய பஞ்சாப்

By karthikeyan VFirst Published Jan 26, 2021, 3:20 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரின் முதல் காலிறுதி போட்டியில் கர்நாடகா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
 

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவரும் நிலையில், முதல் காலிறுதி போட்டியில் கர்நாடகா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இடையேயான காலிறுதி போட்டி இன்று பிற்பகல் 12 மணிக்கு அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் தொடங்கி நடந்தது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடியது கர்நாடக அணி. கர்நாடக அணியின் தொடக்க வீரர்கள் தேவ்தத் படிக்கல் மற்றும் கேப்டன் கருண் நாயர் ஆகிய இருவருமே சொதப்பினர். படிக்கல் 11 ரன்னிலும் கருண் நாயர் 12 ரன்னிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஷரத் பிஆர்(2), பவன் தேஷ்பாண்டே(0), அனிருதா ஜோஷி(27), ஷ்ரேயாஸ் கோபால்(13) என அனைவரும் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் சொற்ப ரன்களுக்கு நடையை கட்ட, கர்நாடக அணி 18வது ஓவரிலேயே வெறும் 87 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக சித்தார்த் கவுல் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் ஷர்மா, அர்ஷ்தீப் சிங், ராமன் தீப் சிங் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மயன்க் மார்கண்டே ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இதையடுத்து 88 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, பிரப்சிம்ரன் சிங் மற்றும் கேப்டன் மந்தீப் சிங் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி 13வது ஓவரிலேயே இலக்கை எட்டி போட்டியை முடித்தனர். சிம்ரன் சிங் 49 ரன்களும் மந்தீப் சிங் 35 ரன்களும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், கர்நாடக அணி தொடரை விட்டு வெளியேறியது.

இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் மற்றொரு காலிறுதி போட்டியில் தமிழ்நாடு மற்றும் இமாச்சல பிரதேச அணிகள் மோதுகின்றன.
 

click me!