#BBL சாம் பில்லிங்ஸின் தனிநபர் போராட்டம் வீண்.! ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்ட்ரூ டை.. PRS வெற்றி

By karthikeyan VFirst Published Jan 9, 2021, 5:54 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸுக்கு எதிராக சாம் பில்லிங்ஸ் தனிநபராக போராடியும், ஆண்ட்ரூ டையின் பந்தில் போல்டானதால் சிட்னி தண்டர் அணி தோல்வியை தழுவியது.
 

பிக்பேஷ் லீக்கில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவரில் 185 ரன்கள் அடித்தது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியில் காலின் முன்ரோ 41 பந்தில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அவரை தவிர வேறு யாரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. 

ஆனால் கேப்டன் அஷ்டன் டர்னர் அதிரடியாக ஆடி 13 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் அடித்ததால் 20 ஓவரில் பெர்த் அணி 185 ரன்கள் அடித்தது.

186 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிட்னி தண்டர் அணியில் சாம் பில்லிங்ஸை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. 46 ரன்களுக்கே சிட்னி தண்டர் அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. சாம் பில்லிங்ஸ் அதிரடியாக ஆடி வேகமாக ரன்களை சேர்க்க, மறுமுனையில் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து கொண்டே இருந்தனர்.

ஆனாலும் விடாமல் தனிநபராக போராடி அரைசதம் அடித்து, சதத்தையும் வெற்றிக்கான இலக்கையும் நோக்கி சென்ற சாம் பில்லிங்ஸை 19வது ஓவரில் போல்டாக்கி அனுப்பினார் ஆண்ட்ரூ டை. 48 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 83 ரன்களை குவித்த பில்லிங்ஸ், சிட்னி தண்டர் அணியின் ஸ்கோர் 162 ரன்களாக இருந்தபோது ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பின்னர் 9 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், ஒருவேளை பில்லிங்ஸ் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், சிட்னி தண்டர் அணி வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் சரியான நேரத்தில் பில்லிங்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார் ஆண்ட்ரூ டை.

இதையடுத்து 168 ரன்களுக்கு சிட்னி தண்டர் அணி சுருண்டதால், 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி. 
 

click me!