தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jun 23, 2019, 11:48 PM IST
Highlights

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
 

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்கள் ஃபகார் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் அதிரடியாக தொடங்கினர். 

ரபாடா, இங்கிடி, கிறிஸ் மோரிஸ், ஃபெலுக்வாயோ என தென்னாப்பிரிக்க கேப்டன்  மாறி மாறி பந்துவீச வைத்தும் பலனில்லை. ஃபகாரும் இமாமும் பவுண்டரிகளை தெறிக்கவிட்டனர். கிறிஸ் மோரிஸ் வீசிய 12வது ஓவரில் ஃபகார் ஜமான் கொடுத்த கேட்ச்சை பிடித்துவிட்டு இம்ரான் தாஹிர் தனது பாணியில் வெறித்தனமாக ஓடியே கொண்டாடினார். ஆனால் ரீப்ளேவில் பந்து தரையில் பட்டது தெரிந்தது. இதையடுத்து ஃபகார் ஜமான் தப்பினார். 

ஆனால் மீண்டும் தாஹிரின் பந்திலேயே ஆட்டமிழந்தார் ஃபகார். ஃபாஸ்ட் பவுலர்களை பயன்படுத்தி பலன் இல்லாததால் இம்ரான் தாஹிரை இறக்கினார் டுப்ளெசிஸ். அதற்கு பலன் கிடைத்தது. தாஹிர் வீசிய 15வது ஓவரில் ஃபகார் ஜமான் 44 ரன்களில் ஆம்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தனது முந்தைய கொண்டாட்டம் ஏமாற்றத்தில் முடிய, இந்த முறை செமயாக ஓடி கொண்டாடினார் தாஹிர். ஃபகார் ஜமான் - இமாம் உல் ஹக் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 81 ரன்களை குவித்தது. 

இதையடுத்து இமாமுடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இமாம் உல் ஹக்கையும் அதே 44 ரன்களில் வீழ்த்தினார் தாஹிர். தாஹிரின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து நடையை கட்டினார் இமாம். பாகிஸ்தான் அணி 98 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின்னர் முகமது ஹஃபீஸ் சோபிக்கவில்லை. வெறும் 20 ரன்களில் ஹஃபீஸ் ஆட்டமிழந்தார். ஆனால் பாபர் அசாமும் ஹாரிஸ் சொஹைலும் சிறப்பாக ஆடினர். அரைசதம் அடித்த பாபர் அசாம் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஹஃபீஸ் 59 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். பாபர் அசாம் மற்றும் ஹாரிஸ் சொஹைலின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 308 ரன்கள் அடித்தது பாகிஸ்தான் அணி.

309 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியிலும் சொதப்பினர். ஆம்லா 2 ரன்களில் ஆட்டமிழக்க, டி காக்கும் கேப்டன் டு ப்ளெசிஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். தென்னாப்பிரிக்க அணி 91 ரன்கள் இருக்கும்போது இரண்டாவது விக்கெட்டாக டி காக் ஆட்டமிழந்தார்.

அரைசதம் அடித்த டு ப்ளெசிஸ், அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்க்ரம் 7 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் டேவிட் மில்லர், வாண்டெர் டசன், ஃபெலுக்வாயோ ஆகியோர் களத்தில் நிலைத்தனர். ஆனாலும் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றி தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லவில்லை.

50 ஓவர் முடிவில் வெறும் 259 ரன்கள் மட்டுமே அடித்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 
 

click me!