ஒரு நல்ல ரெக்கார்டு, ஒரு மொக்கை ரெக்கார்டு.. சாஹலுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியும் அதிர்ச்சியும்

By karthikeyan VFirst Published Dec 10, 2019, 4:18 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சாஹலுக்கு ஒரு நல்ல ரெக்கார்டும் ஒரு மோசமான ரெக்கார்டும் காத்துக்கொண்டிருக்கிறது. 
 

குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின்னர் ஜோடி கடந்த இரண்டு ஆண்டுகளாக அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி குவித்ததோடு வெற்றிகளையும் பெற்று கொடுத்தது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடி, உலக கோப்பையில் சோபிக்கவில்லை. 

உலக கோப்பைக்கு பின்னர் குல்தீப் யாதவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. டி20 அணியில் சாஹலுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு இந்திய அணி தயாராகிவரும் நிலையில், பேட்டிங் ஆட தெரிந்த ஸ்பின்னர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதால், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, க்ருணல் பாண்டியா ஆகியோருக்கே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. 

சாஹல், அணிக்கு தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கக்கூடியவர் என்பதால், பேட்டிங் ஆட தெரியவில்லை என்றாலும் அணியில் இடம்பெறுகிறார். அவர் முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தாலும் ரன்களை வாரி வழங்கிவிடுகிறார். அவரது பவுலிங் ஸ்லோவாக இருப்பதாலும், பந்தை அவர் நன்றாக தூக்கி போடுவதாலும், பேட்ஸ்மேன்களுக்கு நல்ல டைமிங் கிடைப்பதால் அடித்து நொறுக்கிவிடுகின்றனர். அதுதான் அவரது பலமும் கூட. அதனால்தான் அவருக்கு விக்கெட் கிடைக்கிறது. 

36 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் சாஹல். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை அஷ்வினுடன் பகிர்ந்துள்ளார். அஷ்வின் 46 போட்டிகளில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினால் கூட அஷ்வினை முந்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை சாஹல் படைத்துவிடுவார். 

அதேபோல மோஅச்மான ரெக்கார்டு ஒன்றும் காத்திருக்கிறது. இதுவரை டி20 கிரிக்கெட்டில் 64 சிக்ஸர்களை கொடுத்துள்ளார் சாஹல். டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை வழங்கிய பவுலர்கள் பட்டியலில் 65 சிக்ஸர்களை வழங்கிய ஷகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார். எனவே அடுத்த போட்டியில் சாஹல் பவுலிங்கில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் 2 சிக்ஸர்கள் அடித்தால், ஷகிப்பை சாஹல் முந்திவிடுவார். 
 

click me!