ENG vs SA: ராபின்சன், பிராடிடம் சரணடைந்த தென்னாப்பிரிக்க வீரர்கள் முதல் இன்னிங்ஸில் சொற்ப ரன்களுக்கு ஆல்அவுட்

By karthikeyan VFirst Published Sep 10, 2022, 7:47 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் வெறும் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்க அணி.
 

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. எனவே தொடர் 1-1 என சமனடைந்தது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டிக்கான டாஸ் கடந்த 8ம் தேதி போடப்பட்டது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டநிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவால் 2ம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: இந்திய அணியின் நலன் கருதி அதிரடி முடிவு..! குஷியில் கோலி.. பீதியில் ராகுல்

3ம் நாளான இன்றுதான் அந்த போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்திருந்ததால், தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இங்கிலாந்து அணி:

அலெக்ஸ் லீஸ், ஜாக் க்ராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பிராட், ஆலி ராபின்சன், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

தென்னாப்பிரிக்க அணி:

டீன் எல்கர் (கேப்டன்), சாரெல் எர்வீ, கீகன் பீட்டர்சன், ரியான் ரிக்கல்டான், கயா ஜாண்டோ, கைல் வெரெய்ன் (விக்கெட் கீப்பர்), வியான் முல்டர், மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா.
 
முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென ஆட்டமிழந்தனர். குறிப்பாக ஆலி ராபின்சன் பவுலிங்கில் தென்னாப்பிரிக்க வீரர்கள் மண்டியிட்டு சரணடைந்தனர். தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் எர்வீயை(0) ஆண்டர்சனும், ரெக்கால்டனை (11) ஸ்டூவர்ட் பிராடும் வீழ்த்தினர்.

எல்கர்(1), கீகன் பீட்டர்சன்(12), கைல் வெரெய்ன்(0), முல்டர்(3) ஆகிய நால்வரையும் ஆலி ராபின்சன் வீழ்த்த, 36 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி, 3ம் நாள் ஆட்டத்தின் முதல் செசன் முடிவில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் அடித்திருந்தது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி.. ஆஷிஷ் நெஹ்ராவின் அதிரடி தேர்வு..! சீனியர் வீரருக்கு அணியில் இடம் இல்லை

2வது செசனில் ஜாண்டோ (23), மஹராஜ் (18), நோர்க்யாவை பிராட் வீழ்த்த, மார்கோ யான்செனை(30) ராபின்சன் வீழ்த்த, முதல் இன்னிங்ஸில் வெறும் 118 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி ஆல் அவுட்டானது. ஆலி ராபின்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆண்டர்சன் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது இங்கிலாந்து அணி. 
 

click me!