இந்தியா - நியூசிலாந்து இடையேயான முக்கியமான 3வது டி20 போட்டியில் களமிறங்கும் உத்தேச நியூசிலாந்து அணியை பார்ப்போம்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி, இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்தது.
ஆக்லாந்தில் நடந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் 203 ரன்கள் அடித்தும், அந்த ஸ்கோரை தடுக்க முடியாமல் நியூசிலாந்து அணி படுதோல்வியடைந்தது. பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் இருந்த நிலையில், அந்த ஸ்கோர் குறைவுதான். நியூசிலாந்து அணி அந்த போட்டியில் பெற்ற தொடக்கத்திற்கும், வில்லியம்சனும் டெய்லரும் மிடில் ஓவர்களில் ஆடிய ஆட்டத்திற்கும் அந்த அணி 220-230 ரன்கள் அடித்திருக்கலாம். ஆனால் டெத் ஓவர்களை இந்திய பவுலர்கள் அபாரமாக வீசி கட்டுப்படுத்தியதால் அந்த அணி 203 ரன்களை மட்டுமே அடித்தது. அந்த இலக்கை இந்திய அணி 19வது ஓவரிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது.
அதேபோல இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, சேஸிங் செய்திருக்கலாம். அதைவிடுத்து, இலக்கை விரட்டுவதில் வல்லமை பெற்ற இந்திய அணியை இலக்கை விரட்டவிட்டது நியூசிலாந்து. அதற்கான பலனையும் அனுபவித்தது. இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 132 ரன்களை மட்டுமே அடிக்க, 133 ரன்கள் என்ற எளிய இலக்கை அசால்ட்டாக அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வென்றால் இந்திய அணி தொடரை வென்றுவிடும். அதேநேரத்தில் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க, இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து அணி உள்ளது.
எனவே இந்த போட்டி இந்திய அணியைவிட நியூசிலாந்துக்கு மிக முக்கியமானது. இந்த போட்டி முக்கியமான போட்டி என்பதால், நியூசிலாந்து அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. ஆனால் கடந்த 2 போட்டிகளிலும் இந்திய அணிக்கு எந்த விதத்திலும் நெருக்கடியளிக்காத பவுலிங் யூனிட்டில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.
இன்றைய(3வது) போட்டியில் ஃபாஸ்ட் பவுலர் ஸ்காட் குஜ்ஜெலின் அணியில் சேர்க்கப்படுவார். டிம் சௌதி அனுபவ ஃபாஸ்ட் பவுலர் என்பதால் அவர் அணியில் இருப்பார். ஸ்பின் பவுலர்களாக மிட்செல் சாண்ட்னெரும் இஷ் சோதியுமே இருப்பர். மூன்றாவது ஃபாஸ்ட் பவுலராக பென்னெட் - டிக்னெர் ஆகிய இருவருமே நீக்கப்படுவர். கடந்த 2 போட்டிகளிலும் பென்னெட்டும் டிக்னெரும் ஆடினர். அவர்கள் இருவரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் பெரும்பாலும் அவர்கள் இருவரும் நீக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. இந்திய அணிக்கு எதிராக புதிய ஃபாஸ்ட் பவுலிங் காம்பினேஷனை முயற்சிக்கும் விதமாக குஜ்ஜெலினும் டேரைல் மிட்செலும் இறக்கப்பட வாய்ப்புள்ளது.
நியூசிலாந்து அணி:
மார்டின் கப்டில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், டிம் சேஃபெர்டீ(விக்கெட் கீப்பர்), காலின் டி கிராண்ட் ஹோம், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, ஸ்காட் குஜ்ஜெலின், டேரைல் மிட்செல்.