கேப்டன் பதவி காலி..? ரசிகர்கள் அதிர்ச்சி

By karthikeyan VFirst Published May 21, 2020, 9:41 PM IST
Highlights

நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விடுவிக்கப்படுவதாக பரவிய தகவல் குறித்த தெளிவான விளக்கம் கிடைத்துள்ளது. 
 

சமகால கிரிக்கெட்டின் சிறந்த 3 வீரர்களில் ஒருவராக கேன் வில்லியம்சன் திகழ்கிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆடுவதுடன், மூன்றுவிதமான நியூசிலாந்து அணிகளின் கேப்டனாகவும் வில்லியம்சனே திகழ்கிறார். 

வில்லியம்சன் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்லாது மிகச்சிறந்த கேப்டனும் கூட. சிறந்த தலைமைத்துவ பண்புகளுடன் திகழும் வில்லியம்சன், வீரர்களை கையாளுவது, களவியூகம், எதிரணிகளுக்கு எதிரான உத்தி என அனைத்திலும் கைதேர்ந்தவராக, நியூசிலாந்து அணியை சிறப்பாக வழி நடத்தி கொண்டிருக்கிறார். 

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையை கிட்டத்தட்ட வென்றுவிட்டது என்றே கூற வேண்டும். அதிகாரப்பூர்வமாக இங்கிலாந்து உலக கோப்பையை வென்றிருந்தாலும், தார்மீக ரீதியாக கோப்பை இரு அணிகளுக்குமானதுதான். அந்தளவிற்கு சிறப்பாக ஆடியது நியூசிலாந்து. நியூசிலாந்து ஃபைனலில் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெறவில்லை. ஆனால் அதே நேரத்தில் தோற்கவும் இல்லை என்பதுதான் உண்மை. இங்கிலாந்து அணி அளவுக்கு வலுவான அணியாக நியூசிலாந்து இல்லாவிட்டாலும், அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி, இறுதி போட்டியில் இங்கிலாந்தை தெறிக்கவிட்டது. 

இவ்வாறாக, நியூசிலாந்து அணியை வில்லியம்சன் கேப்டனாக இருந்து சிறப்பாக வழி நடத்தி கொண்டிருக்கும் நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வில்லியம்சனை நீக்கிவிட்டு டாம் லேதம் கேப்டனாக நியமிக்கப்பட இருப்பதாக ஒரு தகவல் பரவியது. நியூசிலாந்து அணி, சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி 2-0  என டெஸ்ட் தொடரை வென்றது. ஆனாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டியில் தோற்று தொடரை இழந்ததன் விளைவாகவும் மூன்று விதமான அணிகளுக்கும் கேப்டனாக இருப்பதால் வில்லியம்சனுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாலும், அவர் டெஸ்ட் அணி கேப்டன்சியிலிருந்து நீக்கப்படலாம் என ஒரு தகவல் வெளியாகி வைரலானது. 

ஆனால், வில்லியம்சனை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கும் திட்டம் எதுவுமில்லை எனவும் அப்படி பரவிய தகவல் உண்மையில்லை எனவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்துள்ளது. 
 

click me!