முதல் டெஸ்ட்டில் படுமட்டமா விளையாடிய தென்னாப்பிரிக்கா! இன்னிங்ஸ் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி

By karthikeyan VFirst Published Feb 19, 2022, 2:36 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியில் எந்த வீரருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் மேட் ஹென்ரியின் வேகத்தில் மண்டியிட்டு சரணடைந்தனர். மேட் ஹென்ரி அபாரமாக பந்துவீசி தென்னாப்பிரிக்காவின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த அணியில் அதிகபட்சமாகவே ஹம்ஸா 25 ரன்கள் தான் அடித்தார். எல்கர், மார்க்ரம், வாண்டெர் டசன், டெம்பா பவுமா ஆகிய அனைத்து முன்னணி வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 95 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை நியூசிலாந்து அணியில் ஹென்ரி நிகோல்ஸ் அபாரமாக விளையாடி சதமடித்தார். நிகோல்ஸ் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நைட் வாட்ச்மேனாக இறக்கப்பட்ட நீல் வாக்னர் 49 ரன்கள் அடித்து அசத்தினார்.

அதன்பின்னர் ஒருமுனையில் டாம் பிளண்டெல் நிலைத்து ஆட, மறுமுனையில் காலின் டி கிராண்ட் ஹோம் 45 ரன்களுக்கும், ஜாமிசன் 15 ரன்னுக்கும் டிம் சௌதி 8 ரன்னுக்கும் வெளியேறினர். 388 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி. கடைசி விக்கெட்டுக்கு பிளண்டெலுடன் ஜோடி சேர்ந்த மேட் ஹென்ரி அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 68 பந்தில் 58 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். சதத்தை நெருங்கிய டாம் பிளண்டெல் 96 ரன்களுக்கு கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்து சதத்தை 4 ரன்னில் தவறவிட்டார். கடைசி விக்கெட்டுக்கு பிளண்டெலும் ஹென்ரியும் இணைந்து 94 ரன்களை குவித்தனர்.

முதல் இன்னிங்ஸில் 482 ரன்களை குவித்தது நியூசிலாந்து. இதையடுத்து 387 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, இந்த இன்னிங்ஸில் டிம் சௌதியின் பவுலிங்கில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அபாரமாக பந்துவீசிய டிம் சௌதி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், மேட் ஹென்ரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டெம்பா பவுமா 41 ரன்கள் அடித்தார். கைல் வெரெய்ன் 30 ரன்கள் அடித்தார். மற்ற அனைவரும் இதைவிட சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2வது இன்னிங்ஸில் வெறும் 111 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்க அணி.

இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே மிரட்டிய மேட் ஹென்ரி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

click me!