வில்லியம்சனை பார்க்க வியப்பா இருக்கு.. அவரோட டீமும் அவரை மாதிரியே இருக்காங்க..! முன்னாள் கேப்டன் புகழாரம்

By karthikeyan VFirst Published Jul 15, 2020, 10:44 PM IST
Highlights

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனையும் அவரது தலைமையிலான அணியையும் வெகுவாக புகழ்ந்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன். 
 

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனையும் அவரது தலைமையிலான அணியையும் வெகுவாக புகழ்ந்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன். 

2019 உலக கோப்பை இறுதி போட்டியை போன்ற பரபரப்பான மற்றும் மனதை கசக்கி பிழிந்த ஒரு போட்டியை இனிமேல் பார்க்கமுடியுமா என்பதே சந்தேகம்தான். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அந்த இறுதி போட்டியை பார்த்தவர்களுக்கு செம த்ரில்லர் மூவி பார்த்ததைவிட மிகச்சிறந்த அனுபவம் கிடைத்திருக்கும். அந்தளவிற்கு ரசிகர்களை சீட் நுனியில் உட்காரவைத்த பரபரப்பான போட்டி அது. 

2019 உலக கோப்பையை இங்கிலாந்து அணி தான் வெல்லும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். இங்கிலாந்து அணி மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால், அந்த அணி சிறப்பாக ஆடினாலும் அது பெரிய ஆச்சரியமாக இல்லை. சொல்லப்போனால், அந்த அணி மீது இருந்த எதிர்பார்ப்பு அளவிற்கு அந்த அணி சிறப்பாக ஆடவில்லை என்றாலும், நன்றாகத்தான் ஆடியது. அதனால்தான் கோப்பையை வென்றது.

ஆனால் நியூசிலாந்து அணி மீது பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. கேன் வில்லியம்சனின் நுணுக்கமான கேப்டன்சி, சாமர்த்தியமான சாதுர்யமான நகர்வுகள் ஆகியவற்றால்தான், அந்த அணி ஒரு அணியாக ஒருங்கிணைந்து பல வலுவான அணிகளை வீழ்த்தி இறுதி போட்டிவரை வந்து, இறுதி போட்டியிலும் அசத்தியது. 

ஆனால் கடைசியில் போட்டியும் டை ஆகி, சூப்பர் ஓவரும் டை ஆனதால், பவுண்டரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் முடிவு தீர்மானிக்கப்பட்டதால், வெறும் 7 பவுண்டரிகள் இங்கிலாந்து அணியை விட நியூசிலாந்து அணி பின் தங்கியிருந்ததால் கோப்பையை இழந்தது. போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் கிரிக்கெட் உலகிற்கே பெரும் அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. ஏனெனில் நியூசிலாந்து அணியும் கோப்பைக்கு தகுதியான அணி. 

இரு அணிகளுமே அபாரமாக ஆடி கடுமையாக போராடின. ஆனால் சூப்பர் ஓவரும் டை ஆனதால், ஐசிசி விதிப்படி, அந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்றது. நியூசிலாந்து அணி கோப்பையை வெல்லவில்லை என்றாலும், அந்த அணி தோற்கவில்லை என்பதுதான் உண்மை. ஐசிசி விதிப்படி இங்கிலாந்து உலக கோப்பையை வென்றிருந்தாலும், தார்மீக அடிப்படையில் அந்த கோப்பை இரு அணிகளுக்குமே சொந்தம்தான். 

முதல் உலக கோப்பையை வெல்லும் கனவுடன் இறுதி வரை போராடி, தோற்காதபோதிலும் கோப்பையை இழந்த நியூசிலாந்து அணி உடைந்து நொறுங்கியது. ஆனாலும் அந்த தருணத்தில் கூட நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் தனது வருத்தத்தை பெரியளவில் வெளிக்காட்டிக்கொள்ளவோ, போட்டி முடிவு குறித்து அதிருப்தி தெரிவிக்கவோ, புலம்பவோ இல்லை.

கேப்டன் கேன் வில்லியம்சனை போலவே நியூசிலாந்து வீரர்களும் கண்ணியம் காத்தனர். இந்நிலையில், உலக கோப்பையை நியூசிலாந்து நூலிழையில் இழந்தபோதிலும், அந்த அணி காட்டிய கண்ணியத்தையும் முதிர்ச்சியையும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் புகழ்ந்துள்ளார். 

கேன் வில்லியம்சன் மற்றும் நியூசிலாந்து அணி குறித்து பேசிய நாசர் ஹுசைன், உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே எந்த பகையும் இல்லை. 2019 உலக கோப்பை முடிவை வில்லியம்சனும் அவரது தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஏற்றுக்கொண்ட விதமும் அவர்களது ரியாக்ட் செய்த விதமும் மிகச்சிறப்பானது.

வில்லியம்சன் அன்றைய தினம் மாலை, செய்தியாளர் சந்திப்பிற்கு சென்றபோது அனைத்து செய்தியாளர்களும் எழுந்து நின்று கைதட்டி அவரையும் அவரது அணியையும் பாராட்டினர்.  வில்லியம்சன் நினைத்திருந்தால், அந்த முடிவை விமர்சித்து பேசியிருக்கலாம்; அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்காமல், முடிவுக்கு கட்டுப்பட்டு ஜெண்டில்மேனாக நடந்துகொண்டார். கேப்டன் வில்லியம்சனை அப்படியே அவரது அணி வீரர்களும் பிரதிபலித்தனர் என்று நாசர் ஹுசைன் புகழ்ந்தார்.

ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் சூப்பர் ஓவரும் டை-யானால், பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவை தீர்மானிக்கும் விதி ரத்து செய்யப்பட்டு, போட்டியின் முடிவு தீர்மானமாகும் வரை, சூப்பர் ஓவர் வீசப்படும் என்று ஐசிசி விதியை மாற்றியமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!