ஐபிஎல் 2020 ஏலம்: சிஎஸ்கேவுடன் கடும் போட்டி போட்டு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரை தட்டி தூக்கிய மும்பை இந்தியன்ஸ்

By karthikeyan VFirst Published Dec 19, 2019, 5:25 PM IST
Highlights

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரை எடுப்பதில் மும்பை இந்தியன்ஸுக்கும் சிஎஸ்கேவிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. களத்தில் கடும் போட்டியாளர்களான இந்த 2 அணிகளும் ஏலத்திலும் ஒரு வீரருக்காக போட்டி போட்டன. களத்தில் பல முறை ஃபைனலில் வென்றதை போலவே இந்த ஏல போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் தான் வென்றது. 

ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் மிகவும் பரபரப்பாக நடந்துவருகிறது. கொல்கத்தாவில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி ஏலம் நடந்துவருகிறது. 

ஐபிஎல் அணிகளில் ஒவ்வொரு சீசனிலுமே, தேவையில்லாமல்  மற்றும் அவசியத்திற்கு அதிகமாக எந்தவித மாற்றத்தையும் செய்யாத அணிகள் என்றால் அது சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸும் தான். 

மற்ற அணிகள் எல்லாம் ஒவ்வொரு சீசனிலும் பல வெளிநாட்டு வீரர்களை, அதிகமான விலைக்கு வாங்கி குவிக்கும் நிலையில், சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளின் கோர் டீம் வலுவாக இருப்பதால், அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் ஏலத்தில் கலந்துகொள்வார்கள். கோர் டீம் வலுவாக இருப்பதால்தான் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், சிஎஸ்கே அணி 3 முறையும் கோப்பையை வென்றுள்ளன. சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸும் 3 முறை இறுதி போட்டியில் மோதியுள்ளன. அதில் 2 முறை மும்பை இந்தியன்ஸ் அணி வென்று கோப்பையை வென்றது. 

அந்தவகையில், களத்தில் கடும் போட்டியாளர்களான மும்பை இந்தியன்ஸும் ஏலத்திலும் ஒரு வீரருக்காக கடுமையாக மோதின. ஆனால் ஐபிஎல் ஃபைனல்களில் எப்படி, சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை அணி கோப்பையை வென்று, சிஎஸ்கே மீது ஆதிக்கம் செலுத்தியதோ, அதேபோலவே, ஏலத்திலும் மும்பை இந்தியன்ஸ் தான் வென்றது. 

ஆஸ்திரேலிய அணியின் பவுலிங் ஆல்ரவுண்டர் நாதன் குல்ட்டர்நைலை எடுக்க இரு அணிகளும் ஆர்வம் காட்டின. மும்பை இந்தியன்ஸுக்கும் சிஎஸ்கேவிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு அணிகளுமே விட்டுக்கொடுப்பதாயில்லை. இரண்டு சாம்பியன் அணிகளும் குல்ட்டர்நைலுக்காக அடித்து கொண்டிருக்க, மற்ற அணிகள் இந்த தரமான சம்பவத்தை வேடிக்கை பார்த்தன. 

ஒருவழியாக கடைசியில் ரூ.8 கோடிக்கு நாதன் குல்ட்டர்நைலை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 
 

click me!