சர்வதேசத்தை மிரட்டும் இந்திய திறமைகள்.. 17 வயதில் இரட்டை சதமடித்து இளம் வீரர் சாதனை

By karthikeyan VFirst Published Oct 17, 2019, 10:04 AM IST
Highlights

விஜய் ஹசாரே தொடரில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் 17 வயதே ஆன மும்பை அணி வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து சாதனை படைத்துள்ளார். 
 

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் வெகு சிறப்பாக இருப்பதை இளம் வீரர்களின் திறமையை கண்டே அறிந்துகொள்ள முடிகிறது. நடந்துவரும் விஜய் ஹசாரே தொடரில் அண்மையில் கேரள வீரர் சஞ்சு சாம்சன் கோவா அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி இரட்டை சதமடித்த நிலையில், மும்பை அணியின் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், ஜார்கண்ட் அணிக்கு எதிராக அருமையாக ஆடி இரட்டை சதமடித்துள்ளார். 

கடந்த 14ம் தேதி கேரள அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்த ஜெய்ஸ்வால், நேற்று ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக ஆடினார். முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ஆதித்ய தரே ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கத்தை மும்பை அணிக்கு அமைத்து கொடுத்தனர். 

முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 200 ரன்களை சேர்த்தனர் ஆதித்ய தரே 78 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதல் இறுதி வரை அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற உலக சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். 

கடைசி ஓவர் வரை களத்தில் இருந்த ஜெய்ஸ்வால், 154 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களுடன் 203 ரன்களை குவித்தார். இவரது அபாரமான பேட்டிங்கால் 358 ரன்களை குவித்த மும்பை அணி, ஜார்கண்ட் அணியை 319 ரன்களுக்கு ரன்களுக்கு சுருட்டி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஜெய்ஸ்வால் இரட்டை சதமடிக்கும்போது அவரது வயது 17 வயது முடிந்து 292 நாட்கள். இதன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 1975ல் தென்னாப்பிரிக்க வீரர் ஆலன் பாரோ 20 வயதில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்ததுதான் சாதனையாக இருந்துவந்தது. 44 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார் ஜெய்ஸ்வால். 


 
மேலும் லிஸ்ட் ஏ போட்டியில் இரட்டை சதமடித்த ஏழாவது இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், சேவாக், ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கௌஷால், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு அடுத்து லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்த வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இவர்களில் சச்சின், சேவாக், ரோஹித் ஆகிய மூவரும் சர்வதேச போட்டியில் இரட்டை சதமடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

சஞ்சு சாம்சன், பிரித்வி ஷா, ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் என இளம் இந்திய திறமைகள், சர்வதேச அணிகளை அச்சுறுத்துகின்றனர். 
 

click me!