ரிஷப் பண்ட்டை ஓரங்கட்டத்தான் சஞ்சு சாம்சன் அணியில் எடுக்கப்பட்டாரா..? வெளிவந்தது அதிரடி தகவல்

By karthikeyan VFirst Published Oct 25, 2019, 9:53 AM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான டி20 அணியில் இளம் வீரர் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய அணியில் ஆடுவதற்கு தகுதியான இளம் திறமையான வீரர்களில் முதன்மையானவர் சஞ்சு சாம்சன். அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என கவுதம் கம்பீர் அடிக்கடி வலியுறுத்திவந்தார். உலக கோப்பை அணியிலேயே அவரை எடுக்க வேண்டும் எனவும் நான்காம் வரிசையில் சாம்சனை இறக்க வேண்டும் எனவும் கம்பீர் வலியுறுத்தியிருந்தார்.

ஆனால் தோனிக்கு அடுத்தபடியாக ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் என்பதால் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்துவந்தது. அதுமட்டுமல்லாமல் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக சீரான நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் சமீபகாலமாக தொடர்ச்சியாக நன்றாக ஆடிவருகிறார். விஜய் ஹசாரேவில் கூட ஒரு போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக நன்றாக ஆடிவருவதால், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த தொடருக்கான டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக சொதப்பிவரும் நிலையில், சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டது, ரிஷப் பண்ட்டுக்கு எச்சரிக்கை விடும் விதமாகவா என்ற சந்தேகம் எழலாம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். 

சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டது குறித்து விளக்கமளித்த எம்.எஸ்.கே.பிரசாத், சஞ்சு சாம்சன் பேட்ஸ்மேனாகத்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளாரே தவிர, பண்ட் தான் விக்கெட் கீப்பர். 3-4 ஆண்டுகளுக்கு முன், சஞ்சு சாம்சன் சீராக நிலையாக ஆடமாட்டார். ஆனால் இப்போது அந்த விஷயத்தில் சற்று மேம்பட்டிருக்கிறார். லிஸ்ட் ஏ போட்டிகளில் அபாரமாக ஆடியிருக்கிறார். விஜய் ஹசாரேவிலும் நன்றாக ஆடியிருக்கிறார். அவரை நாங்கள் டாப் பேட்ஸ்மேனாக கருதுகிறோம். அதனால்தான் அணியில் எடுக்கப்பட்டுள்ளார் என்று பிரசாத் விளக்கமளித்தார்.
 

click me!