பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஆகும் முன்னாள் ஜாம்பவான்..?

By karthikeyan VFirst Published Aug 10, 2019, 3:16 PM IST
Highlights

பாகிஸ்தான் அணியை கட்டமைப்பதற்கு பிரதமர் இம்ரான் கானே நேரடியாக களத்தில் இறங்கப்போவதாக தெரிவித்திருந்தார். உள்நாட்டு கிரிக்கெட்டை வலுப்படுத்தி சிறந்த வீரர்களை அணியில் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். 
 

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 11 புள்ளிகளை பெற்றும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றதால் பாகிஸ்தான் அணி வெளியேறியது. 

பாகிஸ்தான் அணி தவறுகளையும் சிக்கல்களையும் கலைந்து மீண்டெழ வேண்டிய அவசியம் உள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டை வலுப்படுத்தி நிறைய திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அணியில் சேர்த்து அணியை வலுவான அணியாக கட்டமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

பாகிஸ்தான் அணியை கட்டமைப்பதற்கு பிரதமர் இம்ரான் கானே நேரடியாக களத்தில் இறங்கப்போவதாக தெரிவித்திருந்தார். உள்நாட்டு கிரிக்கெட்டை வலுப்படுத்தி சிறந்த வீரர்களை அணியில் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். 

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்துரின் பதவிக்காலம் வரும் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. மிக்கி ஆர்துரின் பயிற்சிக்காலத்தில் பாகிஸ்தான் அணி, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இவரது பயிற்சிக்காலத்தின் கீழ்தான் 2017ல் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதோடு, டி20 கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்தது. 

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் படுமோசமாக சொதப்பியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக படுமோசமாக ஆடி தொடர்களை இழந்தது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி ஏழாம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதுடன் அதிக ஈடுபாடு காட்ட வேண்டிய நிலையில் உள்ளது. 

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அவர்கள் பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்பாத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்களை கழட்டிவிட்டது. மிக்கி ஆர்துர், கிராண்ட் ஃப்ளவர் உட்பட பயிற்சியாளர் குழுவில் இருந்த யாருடைய பதவிக்காலமும் நீட்டிக்கப்படவில்லை. 

புதிய பயிற்சியாளரை நியமிப்பதை ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துவிட்டது. வெளிநாட்டு பயிற்சியாளரைத்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமிக்க விரும்புவதாக தகவல் பரவிய நிலையில், மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. ஆனால் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் அணிக்காக 75 டெஸ்ட் போட்டிகளிலும் 162 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார். அவர் ஆடிய காலத்தில் மற்ற வீரர்கள் அனைவரும் மளமளவென விக்கெட்டுகளை இழந்த பல போட்டிகளில், நங்கூரம் போட்டு தனி ஒருவனாக போராடியுள்ளார் மிஸ்பா உல் ஹக்.
 

click me!