ஐபிஎல்லை இப்படி நடத்தலாமே.. இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கொடுக்கும் சமயோசித ஐடியா

By karthikeyan VFirst Published Apr 2, 2020, 7:45 PM IST
Highlights

கொரோனா பீதியால் ஐபிஎல் நடக்குமா என்ற சந்தேகம் நிலவும் நிலையில், ஐபிஎல்லை நடத்துவது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
 

கொரோனா உலகம் முழுதும் தீயாய் பரவிவரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு, கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுப்பதற்காக வரும் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால் சமூக பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது. அதனால் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் ரத்தாகிவிட்டன. ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடர், ஏப்ரல் 14ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன்பின்னரும் தொடங்குவது சந்தேகம் தான். ஏனெனில் இந்தியாவில் கொரோனா நிலைமை சீரடைய இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மத்தியில் தொடங்கவிருக்கும் டி20 உலக கோப்பை திட்டமிட்டபடி தொடங்கப்படுமா என்பதும் சந்தேகமாகவுள்ளது. ஏனெனில் இன்னும் சில மாதங்களுக்கு எந்த நாட்டினரும் வெளிநாட்டிற்கு செல்ல யோசிப்பார்கள். எனவே டி20 உலக கோப்பை குறித்து பின்னர்தான் தெரியவரும். நிலைமை விரைவில் சீரடைந்துவிடும் பட்சத்தில் டி20 உலக கோப்பை திட்டமிட்டபடி நடக்கலாம். 

இந்த ஐபிஎல் சீசனை, டி20 உலக கோப்பை அணியில் இடம்பெற முனையும் அனைத்து நாட்டு அணிகளின் இளம் வீரர்களும் பயன்படுத்தி கொள்ள நினைத்தனர். ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி டி20 உலக கோப்பைக்கான தங்கள் நாட்டு அணிகளில் இடம்பெறும் முனைப்பில் வீரர்கள் இருந்தனர். இந்நிலையில், ஐபிஎல் நடப்பது சந்தேகமாகியுள்ளது. 

இந்நிலையில், ஐபிஎல்லை நடத்துவது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வான். இதுகுறித்து டுவீட்  செய்துள்ள மைக்கேல் வான், டி20 உலக கோப்பைக்கு முன் 5 வாரங்களில் ஐபிஎல்லை நடத்தி முடிக்கலாம். அப்படி செய்வதன்மூலம், வீரர்களுக்கு ஐபிஎல் தொடர், டி20 உலக கோப்பைக்கான சிறந்த பயிற்சியாக அமையும். ஐபிஎல் முடிந்த பின்னர், டி20 உலக கோப்பையை நடத்தலாம் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை அக்டோபர் 18ம் தேதி முதல் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!