மயன்க், கில்லின் சதத்தை சப்பையாக்கிய சூர்யகுமாரின் வேற லெவல் பேட்டிங்.. இமாலய ஸ்கோரை அடித்த இந்தியா சி

By karthikeyan VFirst Published Nov 1, 2019, 1:20 PM IST
Highlights

இந்தியா சி மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா சி அணி 50 ஓவரில் 366 ரன்களை குவித்துள்ளது. 
 

தியோதர் டிராபி தொடர் ராஞ்சியில் நடந்துவருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இந்தியா பி அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியா சி மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடந்துவருகிறது. காலை எட்டே முக்கால் மணிக்கு தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா சி அணி 50 ஓவரில் 366 ரன்களை குவித்துள்ளது. 

இந்தியா சி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் இணைந்து அபாரமாக ஆடி ஸ்கோர் செய்தனர். மயன்க் - கில் ஜோடியை இந்தியா ஏ அணியால் பிரிக்கவே முடியவில்லை. சித்தார்த் கவுல், உனாத்கத், அஷ்வின் ஆகியோரின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். 

மயன்க் மற்றும் கில் ஆகிய இருவருமே சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 226 ரன்களை குவித்தனர். 39வது ஓவரில் தான் இந்தியா ஏ அணி முதல் விக்கெட்டையே வீழ்த்தியது. 111 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 120 ரன்களை குவித்த மயன்க் அகர்வாலை ஹனுமா விஹாரி வீழ்த்தினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ப்ரியம் கார்க் 16 ரன்களில் வெளியேறினார். 

மயன்க்கை தொடர்ந்து சதமடித்த கில், சதத்திற்கு பின்னரும் தனது அபாரமான பேட்டிங்கை தொடர்ந்தார். 142 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 143 ரன்களை குவித்த ஷுப்மன் கில், 47வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஆட்டம் வேற லெவலில் இருந்தது. அதற்குக்காரணம் சூர்யகுமார் யாதவ். கடைசி 3 ஓவர்களில் தான் எதிர்கொண்ட அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசி வாணவேடிக்கை நிகழ்த்தினார் சூர்யகுமார் யாதவ். 

47 ஓவர் முடிவில் 306 ரன்களை அடித்திருந்தது இந்தியா சி அணி. கடைசி 3 ஓவரில் மட்டும் 60 ரன்களை குவித்தது. அதற்கு காரணம் சூர்யகுமார் யாதவின் காட்டடி பேட்டிங். 48வது ஓவரில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸரை விளாசினார் சூர்யகுமார். உனாத்கத் வீசிய 49வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசிய சூர்யகுமார், அந்த ஓவரில் அரைசதத்தையும் கடந்தார். சித்தார்த் கவுல் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசினார். எல்லாமே செம க்ளாசான ஷாட்டுகள். சூர்யகுமாரின் அதிரடியான பேட்டிங்கால் இந்தியா சி அணி 366 ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் வெறும் 29 பந்துகளில் 72 ரன்களை குவித்து அசத்தினார். 

367 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி பேட்டிங் ஆடிவருகிறது. 
 

click me!