ஏலத்தில் எடுத்த டெல்லி கேபிடள்ஸ் அணியை குஷிப்படுத்திய ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்.. பிக்பேஷ் லீக்கில் செம அடி

By karthikeyan VFirst Published Dec 22, 2019, 1:10 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் கடந்த 19ம் தேதி நடந்தது. இந்த ஏலத்தில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் சில பெரிய மற்றும் சிறந்த வீரர்களை எடுத்து ஏலத்தில் சிறப்பான பர்சேஸிங்கை செய்த திருப்தியோடு உள்ளன. 
 

முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள டெல்லி கேபிடள்ஸ் அணி, ஒவ்வொரு அடியையும் தெளிவாக வைக்கிறது. ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளரான பிறகு, ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் ஆகிய இளம் வீரர்களை கொண்ட டெல்லி கேபிடள்ஸ் அணி சிறப்பாக ஆடிவருகிறது. கடந்த சீசனில் அருமையாக ஆடியது. ஆனால் பிளே ஆஃபில் சிஎஸ்கேவிடம் தோற்று வெளியேறியது. 

கடந்த சீசனில் ஃபைனலுக்கு அருகே சென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, அடுத்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அந்தவகையில், அடுத்த சீசனுக்கான ஏலத்தில் சிறந்த வீரர்களை வாங்கியுள்ளது டெல்லி அணி. 

ஏலத்தில் ஆல்ரவுண்டர்கள் மீது கவனம் செலுத்தவுள்ளதாக ஏலத்திற்கு முன்பாகவே ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார். அதேபோலவே ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரையும் டெல்லி கேபிடள்ஸ் அணி எடுத்தது. அதிரடி பேட்ஸ்மேன்களான ஷிம்ரான் ஹெட்மயர் மற்றும் ஜேசன் ராய் ஆகியோரையும் டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது.

கடந்த சீசனில் ஆர்சிபி அணியில் ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸை அந்த அணி கழட்டிவிட்டது. இந்நிலையில், அவரை ரூ.4.80கோடிக்கு எடுத்தது டெல்லி அணி. டெல்லி அணி அவரை ஏலத்தில் எடுத்த நிலையில், பிக்பேஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் ஆடும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் செம அதிரடியாக ஆடி அசத்தியுள்ளார். 

ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரராக இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ஸ்கோர் செய்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் நிலைத்து ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ், 54 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 81 ரன்களை குவித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது அதிரடியான பேட்டிங்கால், 20 ஓவரில் 163 ரன்களை அடித்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியை 111 ரன்களுக்கு சுருட்டி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மார்கஸ் ஸ்டோய்னிஸ் செம ஃபார்மில் சிறப்பாக ஆடிக்கொண்டிருப்பதால், அவரை ஏலத்தில் எடுத்த டெல்லி கேபிடள்ஸ் அணி நிர்வாகம் மகிழ்ச்சியில் உள்ளது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக பேட்டிங் ஆடுவதோடு, முக்கியமான நேரங்களில் தனது மிதவேகப்பந்து வீச்சின் மூலம் விக்கெட்டுகளையும் வீழ்த்தி கொடுக்கக்கூடியவர். ஒருவேளை விக்கெட் வீழ்த்தவில்லையென்றாலும், எதிரணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தக்கூடிய சாமர்த்தியமான பவுலரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!