
ஐபிஎல் 15வது சீசனின் ஃபைனல் வரை வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஃபைனலில் குஜராத் டைட்டன்ஸிடம் தோற்று கோப்பையை இழந்தது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லர் ஒருவரை மட்டுமே அதிகமாக சார்ந்திருந்ததால் தான் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
இந்த சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. ஆனால் கடந்த சில சீசன்களாக தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்தும், ஆட்டத்தில் கொஞ்சம் கூட மேம்படாத வீரராக ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் இருக்கிறார்.
2019 ஐபிஎல்லில் இருந்து ரியான் பராக்கிற்கு தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் அவர் அதை பயன்படுத்திக்கொள்வதில்லை. 2019 ஐபிஎல்லில் 7 போட்டிகளில் ஆடி 160 ரன்கள் அடித்த ரியான் பராக், 2020 ஐபிஎல்லில் 12 போட்டிகளில் ஆடி 86 ரன்களையும், 2021 ஐபிஎல்லில் 11 போட்டிகளில் ஆடி 93 ரன்களையும் மட்டுமே அடித்தார்.
இந்த சீசனில் ரியான் பராக் அனைத்து போட்டிகளிலும் ஆடினார். ஆனாலும் 17 போட்டிகளில் ஆடி வெறும் 183 ரன்கள் மட்டுமே அடித்தார். இளம் வீரரான ரியான் பராக் மீதுமிகுந்த நம்பிக்கை வைத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆடும் லெவனில் தொடர் வாய்ப்பளிக்கிறது. ஆனால் அவர் அதை பயன்படுத்திக்கொள்வதில்லை. அவரது இடத்தில் வேறு ஒரு நல்ல வீரருக்கு வழங்கியிருந்தால் ராஜஸ்தானுக்கு கோப்பை வசப்பட்டிருக்கும்.
ரியான் பராக் அவ்வளவு சிறந்த வீரர் எல்லாம் கிடையாது என்று முன்னாள் வீரர் மதன் லால் கருத்துகூறியுள்ளார். இதுகுறித்து பேசிய மதன் லால், ரியான் பராக் அனைத்து போட்டிகளிலும் ஆடினார். ஆனால் ஒரு போட்டியில் கூட நன்றாக ஆடவில்லை. அவர் ஆட்டத்தை மாற்றும் அளவிற்கான பெரிய வீரர் எல்லாம் கிடையாது. ஐபிஎல்லில் தொடர்ந்து ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்த வீரர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்திருக்கின்றனர். ஆனால் ரியான் பராக் அந்த மாதிரியான வீரர் இல்லை. களத்தில் நிலைத்தபின்னர், அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்வது டி20 கிரிக்கெட்டில் மிக முக்கியம். ரியான் பராக்கிடம் அந்த திறமை இல்லை என்று மதன் லால் தெரிவித்துள்ளார்.