#PSL2021 ரஷீத் கானின் மேட்ச் வின்னிங் பேட்டிங்..! கடைசி ஓவரில் காட்டடி.. லாகூர் அணி வெற்றி

By karthikeyan VFirst Published Jun 10, 2021, 4:09 PM IST
Highlights

கடைசி ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்து லாகூர் காலண்டர்ஸ் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் ரஷீத் கான்.
 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்டு நடத்தப்படுகின்றன. நேற்று நடந்த போட்டியில் லாகூர் காலண்டர்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லாகூர் காலண்டர்ஸ் அணி, இஸ்லாமாபாத் அணியை முதலில் பேட்டிங் செய்தது. இஸ்லாமாபாத் அணியில் எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. அதிகபட்ச ரன்னே, 8ம் வரிசையில் இறங்கிய ஃபஹீம் அஷ்ரஃப் அடித்த 27 ரன்கள் தான். லாகூர் காலண்டர்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசி ரன்னை கட்டுப்படுத்திய ரஷீத் கான், 4 ஓவர்கள் வீசி வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

இஸ்லாமாபாத் அணி 20 ஓவரில் 143 ரன்கள் அடிக்க, 144 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய லாகூர் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான சொஹைல் அக்தர் சிறப்பாக ஆடி 40 ரன்கள் அடித்தார். சீனியர் வீரர் ஹஃபீஸ் 25 பந்தில் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 19 ஓவரில் லாகூர் அணி 128 ரன்கள் அடிக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது.

19வது ஓவரின் கடைசி பந்தில் களத்திற்கு வந்த ரஷீத் கான், நெருக்கடியான நிலையில் கடைசி ஓவரை எதிர்கொண்டார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 3 பந்திலும் பவுண்டரிகளை விளாசிய ரஷீத் கான், 4வது பந்தில் 2 ரன்கள் அடித்து, 5வது பந்தில் சிங்கிள் எடுத்தார். கடைசி பந்தில் ஒரு சிங்கிள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லாகூர் அணி. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்திய ரஷீத் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

click me!