
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஆர்சிபி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அம்பயரின் தவறான முடிவால் போட்டியின் முடிவே தலைகீழாக மாறியது. அம்பயரின் அந்த சர்ச்சை முடிவு கடும் விமர்சனத்துக்குள்ளானது.
ஆர்சிபி - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, 20 ஓவரில் 181 ரன்கள் அடித்தது. 182 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.
கடைசி 2 ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மார்கஸ் ஸ்டோய்னிஸும் ஹோல்டரும் களத்தில் இருந்ததால் லக்னோ அணி வெற்றிக்கான வாய்ப்பு இருந்தது. 19வது ஓவரை வீசிய ஹேசில்வுட் முதல் பந்தை வைடாக வீசினார். வைட் என்று அப்பட்டமாக தெரிந்த அதற்கு, அம்பயர் வைட் கொடுக்கவில்லை. அதனால் கடும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்தார் மார்கஸ் ஸ்டோய்னிஸ். அதே கடுப்பில் அடுத்த பந்தை பேட்டிங் ஆட வைடு லைனில் நின்றார் ஸ்டோய்னிஸ். அதை பயன்படுத்திக்கொண்ட ஹேசில்வுட் ஸ்டம்ப்புக்கு நேராக வீசி ஸ்டோய்னிஸை போல்டாக்கி அனுப்பினார். அவுட்டான பின்னும் அதே கோபத்துடன் சென்றார் ஸ்டோய்னிஸ்.
அம்பயரின் ஒரு தவறான முடிவால் ஆட்டத்தின் முடிவே மாறிப்போனது. இது லக்னோ அணிக்கு மட்டுமல்லாது, ரசிகர்களுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தையடுத்து, அம்பயர்களை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீகாந்த், ஐபிஎல் அம்பயர்களுக்கு என்னதான் ஆச்சு? மிகவும் பரிதாபகரமான சம்பவம். சிறிய தவறுகள் கூட போட்டியின் முடிவையே மாற்றிவிடும். பிசிசிஐ தகுதியான நபர்களை அம்பயர்களாக நியமிக்க வேண்டும். விரைவில் விழித்துக்கொள்ள வேண்டிய விஷயம் இது என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.