படுதோல்விக்கு முழுக்க முழுக்க கோலியின் கேவலமான கேப்டன்சி தான் காரணம்!! கோலி பண்ண தவறுகளின் பட்டியலை பாருங்க

By karthikeyan VFirst Published Mar 11, 2019, 12:56 PM IST
Highlights

இந்திய அணியின் தோல்விக்கு ரிஷப் பண்ட்டின் மோசமான விக்கெட் கீப்பிங்கை விட கோலியின் முதிர்ச்சியற்ற மோசமான கேப்டன்சிதான் முக்கியமான காரணம். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 358 ரன்கள் அடித்தும் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்விக்கு ரிஷப் பண்ட்டின் மோசமான விக்கெட் கீப்பிங்கை விட கோலியின் முதிர்ச்சியற்ற கேப்டன்சிதான் முக்கியமான காரணம். 

கள வியூகம், பவுலிங் சுழற்சி ஆகியவற்றில் ஒரு கேப்டனாக கோலி தொடர்ந்து கோட்டைவிடுகிறார். அண்மைக்காலமாக கேப்டன்சியில் கோலி தேறிவருவதாக தெரிந்தது. ஆனால் இன்னும் ஒரு கேப்டனாக அவர் முதிர்ச்சியடையவில்லை. பவுலிங் சுழற்சியில் ஜீரோவாக இருக்கிறார். 

மொஹாலியில் நேற்று நடந்த போட்டியில் 359 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 12 ரன்களுக்கே இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதையடுத்து கவாஜாவுடன் ஹேண்ட்ஸ்கம்ப் ஜோடி சேர்ந்தார். 4வது ஓவரிலேயே 4ம் வரிசை வீரர் ஹேண்ட்ஸ்கம்ப் களத்திற்கு வந்துவிட்டார். 

இந்த ஜோடி நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தது. 9 ஓவர்கள் வரை புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராவை பயன்படுத்திய கோலி, அதன்பிறகு விஜய் சங்கரையும் குல்தீப் யாதவையும் இறக்கினார். குல்தீப் யாதவிற்கு 2 ஓவர்கள் மட்டுமே கொடுத்துவிட்டு நிறுத்திவிட்டார். அதன்பின்னர் விஜய் சங்கருடன் கேதர் ஜாதவை வீசவைத்தார். இவர்கள் இருவரும் இணைந்து 19வது ஓவர் வரை வீசினர். களத்திற்கு வந்த புது பேட்ஸ்மேனை களத்தில் இருக்கும் பேட்ஸ்மேனுடன் பார்ட்னர்ஷிப் அமைக்கவிடாமல் தடுக்கும் வகையில் அவரது விக்கெட்டை விரைவில் வீழ்த்துவதுதான் முக்கியம். 

அந்த வகையில் ஹேண்ட்ஸ்கம்ப் களத்திற்கு வந்ததும் விஜய் சங்கர் மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய இருவரில் ஒருவரை நிறுத்திவிட்டு சாஹலை வீசவைத்திருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் பார்ட் டைம் பவுலர்களை தொடர்ச்சியாக வீசவைத்து ஹேண்ட்ஸ்கம்ப் களத்தில் நிலைத்து நிற்க வழிவகுத்து கொடுத்ததே கேப்டன் கோலி தான். 

அதனால் கவாஜாவும் ஹேண்ட்ஸ்கம்ப்பும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் நிலைத்துவிட்டனர். அதன்பின்னர் அந்த ஜோடியை பிரிப்பது கடினமாகிவிட்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு 192 ரன்களை சேர்த்து ஆட்டத்தை இந்திய அணியிடமிருந்து பறித்தனர். 

இதில் தான் தவறிழைத்தார் என்றால், 35 ஓவருக்கு பிறகும் கேப்டன்சியில் சொதப்பினார் கோலி. மேக்ஸ்வெல்லின் விக்கெட்டுக்கு பிறகு களத்திற்கு வந்து ஆட்டத்தையே தனது அதிரடியால் புரட்டிப்போட்டு வெற்றியை பறித்தவர் ஆஷ்டன் டர்னர். டர்னர் ஸ்பின் பவுலிங்கின் மீது ஆதிக்கம் செலுத்தி அடித்து ஆடினார். அவர் அடிக்க அடிக்க தொடர்ந்து ஸ்பின் பவுலர்களிடமே பந்தை கொடுத்தார் கோலி. விஜய் சங்கர் 5 ஓவர்கள் வீசி 29 ரன்கள் தான் கொடுத்திருந்தார். 5 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்த விஜய் சங்கரை 38-44 ஓவர்களுக்கு இடையில் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அதை செய்யாத கோலி, தொடர்ந்து சாஹலை வீசவைத்தார். 

சாஹலின் பந்தை அடித்து நொறுக்கினார் டர்னர். சாஹல் 10 ஓவர்களில் 80 ரன்களை வாரி வழங்கினார். இது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணியாக அமைந்த விஷயம். 38-44 ஓவர்களுக்கு இடையில் விஜய் சங்கருக்கு 2-3 ஓவர்களை வழங்கியிருக்கலாம். இப்படியாக கோலி கேப்டன்சியில் படுமோசமாக சொதப்பினார்.

தொடக்கத்தில் விஜய் சங்கரையும் கேதர் ஜாதவையும் வீசவைத்து பார்ட் டைம் பவுலர்களின் கோட்டாவை முடித்துவிட்டால், பின்னர் எஞ்சிய ஓவர்களை பிரைம் ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தலாம் என்று கோலி எண்ணியிருப்பார். ஆனால் அதற்காக இரண்டு பார்ட் டைம் ஸ்பின்னர்களை தொடர்ச்சியாக 7-8 ஓவர்களை வீசவைத்தது தவறான உத்தி. கோலியின் அந்த திட்டம், ஹேண்ட்ஸ்கம்ப் களத்தில் நிலைத்து நிற்க ஏதுவாக அமைந்துவிட்டது. 
 

click me!