#IPL2021 மேட்ச்சும் போச்சு.. காசும் போச்சு..! எல்லா வகையிலும் மோர்கனுக்கு அடி

By karthikeyan VFirst Published Apr 22, 2021, 2:45 PM IST
Highlights

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக கேகேஆர் கேப்டன் ஒயின் மோர்கனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சிஎஸ்கே, ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று, புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.

கேகேஆர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் நிறைய தோல்விகளை தழுவி புள்ளி பட்டியலில் கீழே உள்ளன.

கம்பேக் வெற்றியை எதிர்நோக்கி சிஎஸ்கேவை எதிர்கொண்ட கேகேஆர் அணி, அந்த போட்டியிலும் தோல்வியையே தழுவியது. சிஎஸ்கே நிர்ணயித்த 221 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணி, 35 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ரசல்(22 பந்தில் 54 ரன்கள்), கம்மின்ஸ்(34 பந்தில் 66 ரன்கள்) ஆகியோர் அதிரடியாக ஆடியும் கூட, கம்மின்ஸுக்கு கடைசி நேரத்தில் டெயிலெண்டர்கள் ஒத்துழைப்பு கொடுக்காததால் 202 ரன்கள் அடித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது கேகேஆர் அணி.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு பந்துவீச கேகேஆர் அணி ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டது. ருதுராஜ் கெய்க்வாட் - டுப்ளெசிஸ் தொடக்க ஜோடியை பிரிக்கமுடியாமல் திணறிய கேகேஆர் அணி, அதற்கான திட்டமிடலுக்காக அதிக நேரம் ஒதுக்கியதால், அந்த அணியால் ஒதுக்கப்பட்ட நேரத்தில் பந்துவீசி முடிக்க முடியவில்லை.

எனவே ஐபிஎல் விதிப்படி, கேகேஆர் அணி கேப்டன் ஒயின் மோர்கனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை பந்துவீச தாமதமானால், கேப்டன் மோர்கனுக்கு ரூ.24 லட்சம் அபராதமும், அணி வீரர்களுக்கு ஊதியத்தில் 25 சதவிகிதம் அபராதமும் விதிக்கப்படும். மூன்றாவது முறை அதே தவறு நடந்தால், கேப்டனுக்கு ரூ.30 லட்சம் அபராதத்துடன் ஒரு போட்டியில் ஆட தடையும் விதிக்கப்படும். மற்ற வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்.
 

click me!