T20 World Cup ஃபைனல் NZ vs AUS: கண்டிப்பா அந்த அணி தான் கோப்பையை தூக்கும்..! அடித்து சொல்லும் பீட்டர்சன்

By karthikeyan VFirst Published Nov 13, 2021, 6:03 PM IST
Highlights

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான டி20 உலக கோப்பை ஃபைனலில் எந்த அணி வெற்றி பெற்று உலக கோப்பையை தூக்கும் என்று கெவின் பீட்டர்சன் கருத்து கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை துபாயில் நடக்கிறது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

அரையிறுதிக்கு பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 வலுவான அணிகள் முன்னேறின. அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்தும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளன.

இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதாலும், முதல் முறையாக டி20 உலக கோப்பையை தூக்கும் வேட்கையில் இருப்பதாலும் போட்டி கண்டிப்பாக மிகக்கடுமையாக இருக்கும். 

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பெரிய மேட்ச் வின்னர்கள் என்று யாரும் இல்லையென்றாலும், தேவையான போது யாராவது ஒருசில வீரர்கள் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பெறச்செய்கின்றனர். அந்த அணி வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கின்றனர். இஷ் சோதி, டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், டெவான் கான்வே, வில்லியம்சன், மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், ஜிம்மி நீஷம் என ஒவ்வொரு வீரருமே அணிக்கு தேவையானபோது வெகுண்டெழுந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இதையெல்லாம் விட நியூசிலாந்து அணியின் பெரிய பலமே கேன் வில்லியம்சனின் கேப்டன்சி தான். எவ்வளவு பெரிய அணிக்கு எதிராகவும் தெளிவான திட்டங்களுடன் வருகிறார் வில்லியம்சன். திட்டங்களை நியூசிலாந்து வீரர்கள் களத்தில் சிறப்பாக செயல்படுத்துகின்றனர். தெளிவான திட்டமிடலும், அவற்றை சரியாக செயல்படுத்துவதுமே நியூசிலாந்து அணியின் பெரிய பலம். ஆனால் காயம் காரணமாக டெவான் கான்வே ஃபைனலில் ஆடாதது ஒன்றே நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு.

ஆஸ்திரேலிய அணியில் வார்னர் ஃபார்முக்கு வந்திருப்பது நல்ல விஷயம். மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய ஆல்ரவுண்டர்கள் இருவரும் சிறப்பாக ஆடுகின்றனர். ஸ்மித்தும் அவர்களுடன் இணைந்து, மேத்யூ வேடும் அரையிறுதியில் ஆடியதுபோல் ஆடினால், ஆஸ்திரேலிய அணி அசத்திவிடும். பவுலிங்கை பொறுத்தமட்டில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகிய மூவருமே சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள். ஸ்பின்னில் ஆடம் ஸாம்பா அசத்திவருகிறார்.

இவ்வாறாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக திகழ்ந்தாலும், இரு அணிகளுக்கு இடையேயான பெரிய வித்தியாசமாக ஸ்பின் பவுலிங் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. ஸ்பின் பவுலிங்கை பொறுத்தமட்டில் நியூசிலாந்தின் இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னெர் ஆகிய இருவரும் மிரட்டிவருகின்றனர். இந்த ஸ்பின் ஜோடியை சமாளிப்பதுதான் ஆஸி.,க்கு பெரிய சவாலாக இருக்கும். ஆஸ்திரேலியாவிடம் ஆடம் ஸாம்பா மட்டுமே ஸ்பின்னர். மேக்ஸ்வெல் பார்ட் டைம் பவுலர் தான்.

அதுமட்டுமல்லாது துபாயை பொறுத்தமட்டில் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கும். இந்த உலக கோப்பை தொடரில் துபாயில் நடந்த அனைத்து போட்டிகளிலும் 2வதாக பேட்டிங் ஆடிய அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது என்பதால் டாஸ் மிக முக்கியம்.

இந்நிலையில், நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஃபைனலில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்று இங்கிலாந்து முன்னாள் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கெவின் பீட்டர்சன், நியூசிலாந்து அணி அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. அணியின் அனைத்து விஷயங்களும் கவர் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஆஸ்திரேலியா தான் ஜெயிக்கும். ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதிய 2015 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா  தான் உலக கோப்பையை வென்றது. எனவே ஞாயிற்றுக்கிழமை (14ம் தேதி) ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பையை தூக்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
 

click me!