IND vs NZ டெஸ்ட்: மட்டமான கான்பூர் ஆடுகளம்..! உருண்ட பந்துகள்; மிரண்ட பேட்ஸ்மேன்கள்

By karthikeyan VFirst Published Nov 29, 2021, 6:31 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்த கான்பூர் ஆடுகளம் படுமோசமாக இருந்தது.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்தது. பொதுவாக இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், தங்களது பலத்தை ஓரங்கட்டிவிட்டு கண்டிஷனுக்கு மதிப்பளித்து 3 ஸ்பின்னர்களுடன் ஆடியது நியூசிலாந்து அணி.

ஆனால் நியூசிலாந்து ஸ்பின்னர்கள் இந்த போட்டியில் எதிர்பார்த்ததை போல சோபிக்கவில்லை. 2 இன்னிங்ஸ்களிலும் நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர்களே சிறப்பாக பந்துவீசி அதிக விக்கெட் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் நியூசி., ஃபாஸ்ட் பவுலர்கள் இணைந்து 8 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் இந்திய அணி இழந்த 7விக்கெட்டுகளில் 6 விக்கெட்டை ஃபாஸ்ட் பவுலர்கள் தான் வீழ்த்தினர். 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து நியூசி., ஸ்பின்னர் அஜாஸ் படேல் மட்டும் 3 விக்கெட் வீழ்த்தினார். சோமர்வில் மற்றும் ராச்சின் ரவீந்திரா ஆகிய இருவரும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

அதற்கு நேர்மாறாக இந்திய அணியின் ஸ்பின்னர்கள் தான் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஃபாஸ்ட் பவுலிங்கை பொறுத்தமட்டில் 2 இன்னிங்ஸ்களிலும் உமேஷ் யாதவ் மட்டும் தலா ஒரு  விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி வீழ்த்திய 19 விக்கெட்டுகளில் 17 விக்கெட்டுகளை ஸ்பின்னர்கள் தான் வீழ்த்தினர்.

இந்திய ஆடுகளங்கள் கடைசி 2 நாட்களில் படுமோசமாக இருக்கும் என்பதால் தான் இரு அணிகளும் தலா 3 ஸ்பின்னர்களுடன் ஆடியது. பவுலர்களின் கால்தடங்கள் பதியும் இடங்களில் சிறு சிறு சேதங்கள் உருவாகும். அதைப்பயன்படுத்தி, அந்த இடங்களில் பந்தை பிட்ச் செய்து பேட்ஸ்மேன்களை மிரட்டுவார்கள் ஸ்பின்னர்கள். கால்தடங்களால் சேதமடைந்த இடங்களில் பந்தை பிட்ச் செய்யும் போது அதை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். இந்த கான்பூரில் ஆடுகளத்தில் அந்த சேதமடைந்த இடங்களின் தாக்கம் கூட அதிகம் இல்லையென்றாலும், ஆடுகளமே படுமோசமாக இருந்தது.

பிட்ச்சின் நல்ல இடத்தில் பிட்ச் ஆன பந்துகள் கூட திடீரென தரையுடன் தரையாக கீழே சென்றது. நல்ல தடுப்பாட்ட உத்தியை பெற்றிருக்கும் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான டாம் பிளண்டெல் கூட முதல் இன்னிங்ஸில் அப்படியான ஒரு பந்தில்  தான் ஆட்டமிழந்தார். 94 பந்துகள் பேட்டிங் ஆடிய பிளண்டெல், அக்ஸர் படேலின் பந்தில் போல்டானார். அந்த பந்து அவ்வளவு கீழே தரையை ஒட்டி வருமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவரிடத்தில் யார் இருந்திருந்தாலும் அதுதான் நிலை. சர்ப்ரைஸாக வந்த அந்த பந்திற்கு ஆட்டமிழந்து வெளியேறினார் பிளண்டெல்.

பவுன்ஸும் வித்தியாசமாக இருந்தது. திடீரென சில பந்துகள் மேலெழும்பின; திடீரென சில பந்துகள் கீழே தரையை ஒட்டி சென்றன. இது பேட்டிங் ஆடுவதற்கு கடும் சவாலாக இருந்தது. இதுமாதிரியான இந்திய பிட்ச்களில் ஆடிய அனுபவம் இந்திய வீரர்களுக்கு நிறைய உண்டு. ஆனால் நியூசிலாந்து வீரர்கள், இந்த மட்டமான பிட்ச், தரமான இந்திய ஸ்பின்னர்கள் ஆகிய அனைத்து சவால்களையும் மீறி அருமையாக ஆடி போட்டியை டிரா செய்தனர்.

போட்டி முழுவதுமாக இதுமாதிரியான பந்துகளை நிறைய காணமுடிந்தது. அதனால் போட்டி முழுக்க பந்து திடீரென உருள்வதும், அதைக்கண்டு பேட்ஸ்மேன்கள் மிரள்வதும் தொடர்ந்தது.
 

click me!